பக்கம்:அருளாளர்கள்.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


6. நம்மாழ்வார்

இப்பரந்த உலகைத் தோற்றுவித்த இறைவன் அதனுடன் நில்லாமல் உயிர்களையும் தோற்றுவித்தான். புல், பூண்டில் தொடங்கி மனிதனில் இவ்வுயிர்க்குலம் முழுவதும் ஒரு தொடர்பு கொண்டே நிலைபெற்று வருகிறது. இத்தொடர்பை நன்கு அறிந்த நம் பெரியோர்கள் புல், பூண்டு முதலியவற்றை ஒரறிவுயிர் என்றும், மனிதனை ஆறறிவுயிர் என்றும் பிரித்து, இடைநின்றவற்றை ஒவ்வோர் அறிவை முறையே அதிகம் பெற்றவை என்றும் கூறிப்போயினர். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டவராகிய தொல்காப்பியனார் இந்த உயிர் பகுப்பு முறையை எவ்வளவு அழகாகத் தம் இலக்கணத்தில் கூறிப் போயினார் என்பதை அறியும் பொழுது நாம் அடையும் வியப்பிற்கு அளவே இல்லை. இதோ அவர் கூறும் உயிர்பகுப்பு முறை,

“ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே:

இரண்டு அறிவதுவே அதனொடு நாவே, மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே; நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே, ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே; ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே;நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.”

(தொல்பொருள்-மரபு-27)

இப்பகுப்பு முறையை மரபியல் என்ற தலைப்பின் கீழ் அவர் கூறியதிலிருந்து ஒன்றை அறிந்து கொள்ள