பக்கம்:அருளாளர்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58 அருளாளர்கள்

முடிகிறது. இப்பகுப்பு முறையை ஆசிரியர் தொல் காப்பியனார் தாமே ஆய்ந்து கூறினார் அல்லர் என்பதும் பெறப்படும். ஒரு மொழிபேசும் இனத்தவரிடையே பன்நூறு ஆண்டுகளாக மாறாமல் வழங்கி வரும் சிலவற்றை 'மரபு 'என்று கூறுகிறோம். எனவே, இப்பகுப்பு முறையை மரபியலில் கூறினார் என்பதாலேயே அவர் காலத்திற்குப் பன்நூறு ஆண்டுகட்கு முன்பே தமிழர் இப்பிரிவினையைக் கண்டிருந்தனர் என்பது, அதனை விடாமல் போற்றிப் பாதுகாத்தனர் என்பதும் நன்கு அறியப்படும்.

மனிதனுக்குரிய தனிச் சிறப்பு, ஒரு பொருளைப் பற்றி புறத்தே நின்று ஆராயவும், சிந்திக்கவும் கூடிய இயல்பைப் பெற்றுள்ளமையே ஆகும். உற்றறிவு முதலியவற்றைப் பெற்றுள்ள பிற உயிர்கள் பொருளையும் தன்னையும் பிரித்து ஆயும் இயல்பு பெற்றவையல்ல. ஆதலால் அவை 'நான் யார்? என் உள்ளம் யார்? ஞானங்கள் யார்?' (திருவாசகம்) என்ற வினாக்களை எழுப்பவும் இவ்வினாக் கட்கு விடை கூறவும் வல்லவை அல்ல.

விலங்குகட்கும், மக்கட்பிறப்பில் இழிந்த மாக்கட்கும் இயலாத இக்காரியத்தைச் செய்யும், உயிர்களே பிறப்பில் உயர்ந்துள்ள மக்கள் பிறப்பாகும், நம் போன்றவர்கள் மனத்தில் இத்தகைய வினாக்கள் தோன்றுவது கடினம், ஒரோவழித் தோன்றினாலும் நின்று நிதானித்து விடை காணும் அளவுக்கு நாம் பொறுமையும், அறிவும் பெற்றிருக்கவில்லை. ஆனால் இவ்வினாக்கட்கு விடை காணும் ஆற்றலுடையவர்களையே உலகம் பெரியார்கள் என்றும், ஞானிகள் என்றும், அடியார்கள் என்றும், ஆழ்வார்கள் என்றும் கூறிச் செல்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/65&oldid=1291475" இலிருந்து மீள்விக்கப்பட்டது