பக்கம்:அருளாளர்கள்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மாழ்வார் 57

இந்த வினாக்களை எழுப்பி விடை காண்பவர்களும் இருவகைப்படுவர். அறிவு ஒன்றின் துணைகொண்டு மட்டும் விடை காண்பார் ஒரு வகையினர், அறிவின் துணையுடன் மெய்ப்பொருளை அறிந்துபெறும் அனுபவத் தையும் உடன்கொண்டு அவற்றின் பயனாக விடை காண்பவர் பிறிதொரு வகையினர். இவ்விரண்டாவது வகையைச் சேர்ந்தவர்களை இத்தமிழ் நாட்டார் அடியார்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் என்ற பெயரால் அழைத்தனர். ஒருவன் ஓர் உண்மையைக் கூற வேண்டுமாயின் அதற்குரிய தகுதி அவனிடம் இருத்தல் வேண்டும். தகுதி இல்லாதவன் சொல்லுக்குச் செம்மை யான மதிப்பு இருப்பதில்லை. ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்ற இவர்கட்கு எத்தகைய தகுதி அல்லது உரிமை இருந்தது என்பதனை முதலிற் காண வேண்டும்.

மனிதன் யார் என்பது பற்றியும் உயிர்கட்குத் தலைவனாக உள்ள இறைவன் பற்றியும் பலரும் பேசியுள்ளனர். என்றாலும் அப்பலரும் பேசிய பேச்சிற்கும் இப்பெரியார்கள் பேசிய பேச்சிற்கும் வேறுபாடு நிரம்ப உண்டு. இவர்கள் தங்களை உள்ளவாறு கண்டு, பரம் பொருளையும் கண்டு, அறிந்து, தெளிந்து, உணர்ந்து பாடி இருக்கின்றனர். இங்குக் கூறப்பெற்ற அறிதல், தெளிதல், உணர்தல் என்ற மூன்றும் முதலாவதாகக் கூறப்பெற்ற காட்சி இல்லாமலும் பெறுதல் கூடும். அனுமான அறிவின் துணைகொண்டு பொருளை ஆராய்ந்து அறியலாம்; ஒரளவு தெளியவும் செய்யலாம். ஆனால் உணர்தல் என்பது கடினம். இங்குக் கூறப்பெற்ற உணர்தல் என்பதன் பொருளை அறிந்து கொண்டால் ஆழ்வார்களும் நாயன்மார்களும் ஏனையோரைவிட எவ்விதத்தில் வேறு பட்டவர்கள் என்பதை அறிய முடியும்.