பக்கம்:அருளாளர்கள்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60 அருளாளர்கள்

‘வண்ணந்தான் அதுகாட்டி, வடிவுகாட்டி மலர்க்கழல்கள் அவை காட்டி’

           (திருமுறை: 8, 3-5)

என்று பாடிச் செல்கிறார்.

     இவ்வாறு கூறினவுடன் வடிவத்தைக் காண்கின்ற அளவில் இவர்கள் ஆற்றல் முடிந்துவிடுகிறதா என்று ஐயுறத் தேவையில்லை. இது கருதியே போலும் ஆழ்வார் அடுத்தபடியாக 'எல்லாப் பொருட்கும், தேவர்கட்கு எல்லாம் கருவாகிய கண்ணனை’ என்றும் கூறுகிறார். பொருட்கும் என்ற சொல்லால் அஃறிணைப் பொருள்கள் அனைத்தையும் குறிப்பிட்ட பின்னர் உயர்திணைத் தொகுதியில் தேவர்களைக் குறிப்பிடுவதால் மக்களையும் உடன் சேர்த்துக் கொள்கிறார். எனவே சர அசரம் ஆகிய அனைத்திற்கும் கருவாய் இருப்பவன் இறைவன் என்ற பேருண்மையைக் கூறியவாறாயிற்று. உருவுடைப் பொருள்கள் அனைத்திற்கும் கரு என்ற கூறினமையின் அக்கருவும் உருவுடையதோ என்று ஐயுறுவோரின் ஐயத்தைப் போக்கு முறையில் 'அருவாகிய ஆதியை’ என்று கூறினார்.
  உருவிலாது கருவாகிய இறைவனை உருவுடைய நான் கண்டேன் என்றும், கருவாக இருக்கின்ற இறைவனைக் கருவில் தோன்றிய தான் கண்டேன் என்றும் ஆழ்வார் கூறுவது ஆய்தற்குரியது. முரண்பாட்டில் முழுதலைக் கண்ட பெருமை இப்பெரியாருக்கு உரியதாகும். 'தோற்றம், கேடு அவை இல்லவன்; உடையான்' (நாலாயிரம் 3, 6-5) என்பது 'துயரமே தரு துன்ப, இன்ப வினைகளாய், அவை அல்லனாய்'(3, 6-8) என்பது முதலான அடிகள் இம் முரண்பாட்டைப் பற்றிக் கூறுவனவேயாம். இது பற்றிப் பின்னருங் காணலாம்.