72 அருளாளர்கள்
ஆனால் என்ன அதிசயம்? உள்ளே கலக்கத் தொடங்கிய அவன் கொஞ்சங் கொஞ்சமாக அந்த நெஞ்சையும் உயிரையும் உண்ணத் தொடங்கி விட்டானாம் என்ற கருத்தைப் பின்வரும் பாடலில் கூறுகிறார்.
‘செஞ்சொல் கவிகாள்! உயிர் காத்து
ஆட் செய்ம்மின் திருமாலிருஞ்சோலை வஞ்சக் கள்வன், மாமாயன்
மாயக் கவியாய் வந்து, என் நெஞ்சும் உயிரும் உள் கலந்து,
நின்றார் அறியாவண்ணம் என் நெஞ்சும் உயிரும் அவை உண்டு,
தானேயாகி நிறைந்தானே!
(நாலா: 3140)
உள்ளே கலந்திருக்கும் வரை, நெஞ்சுக்கும் உயிருக்கும் தனித்தன்மை உண்டு. அவற்றில் அவன் கலந்திருந்தான் என்றாலும் அவை வேறு அவன் வேறு என்ற தனித் தன்மையை இழவாமல் இருந்தன அவருடைய நெஞ்சும் உயிரும். ஆனால், கலந்த அவன், தான் வந்து அடைந்த நெஞ்சையும் உயிரையும் உண்ணத் தொடங்கி ஒரு வழியாக முற்றிலும் உண்டேவிட்டான். கலந்து நிற்கையில் நெஞ்சு, உயிர், கள்வன் என மூன்றாக இருந்த பொருள்கள் அவன் உண்டு முடிந்தவுடன் அவன் மட்டுமாகவே எஞ்சிவிட்டன. அவனால் உண்ணப் பெற்ற நெஞ்சும், உயிரும் அவனுள் இரண்டறக் கலந்து விட்டன. உள் கலந்து வேகமும், நெஞ்சையும் உயிரையும் உண்ட வேகமும் வியத்தகு தன்மையுடையன. பொருள் கிடைத்தால் வைத்திருந்து கொஞ்சங் கொஞ்சமாக உண்பவன் அல்லன் இம்மாயக் கள்வன். உலகம் முழுவதையும் புட்டு உண்ணாமல் முழுசாக உண்டவனுக்கு ஒரு நெஞ்சும்