உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருளாளர்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மாழ்வார் 73

உயிரும் எம்மாத்திரம்? எனவே நேரடியாக உண்டு தானாகி நிறைந்துவிட்டானாம்.

 தானே ஆகி நின்றுவிட்ட அம்மாயக் கள்வன் மற்றொரு மாயமும் செய்தானாம். இரண்டு பொருள்கள் (நெஞ்சும் உயிரும்) இருந்தவிடத்தில் அவை இல்லாமற் போய்விட்டால் அந்த இடம் காலியாக வெற்றிடமாக இருக்குமன்றோ? அந்த வெற்றிடத்தைப் பிறர் கண்டால் பொருள் இருந்து மறைந்ததை நினைவிற் கொண்டு தேடத் தொடங்குவர் எனக் கருதிய அக்கள்வன் தனக்கே உரிய ஒரு மாயத்தைச் செய்துவிட்டானாம். அது என்ன மாயம்? அவை இரண்டையும் உண்டுவிட்டு அவை இருந்த இடத்தையும் வெற்றிடமாகச் செய்யாமல் அந்த இடத்திலும் தானே நிறைந்து விட்டானாம்.
 பிறர் அறியாமல் ஆழ்வாரின் உட்புகுந்து, அம் மாயக் கள்வன் அவர் நெஞ்சிலும் உயிரிலும் உள் கலப்பவனைப் போலக் கலந்து, பின்னர் அந்த நெஞ்சையும் உயிரையும் உண்டுவிட்டு அவை இருந்த இடத்திலும் தானே நிறைந்துவிட்டானாம்.
 இதனைக் கூறவந்த பெருமான் ஏனைய கவிஞர்களை விளித்து, ஐயன்மீர்! நீங்கள் மிகவும் விழிப்புடன் இருத்தல் வேண்டும். மாயக் கள்வனின் செய்கை இருந்தவாறு இது! நீங்கள் உங்கள் தற்போதத்தை இழக்காமல் இருக்க விரும்பினால் அம் மாயக் கள்வன் உம்முள் புகாமல் காத்துக் கொள்ளுங்கள்! இல்லையேல் பிறர் அறியாமல் என்னுள் புகுந்து நெஞ்சிலும் உயிரிலும் கலந்து பிறகு அவற்றை உண்டு தானேயாகி நிறைந்தது போல உங்களையும் உண்டு நிறைந்து விடுவான் என்று மேலே காட்டிய ‘செஞ்சொல்’ என்ற பாடலில் பேசியும் இருக்கிறார்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/82&oldid=1291567" இலிருந்து மீள்விக்கப்பட்டது