பக்கம்:அரை மனிதன்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. சீனிவாசன்

43


 அப்பா அவளை உள்ளே சேர்க்கமாட்டார். மருமகள், அவள் உள்ளே நுழையமாட்டாள். எனக்கு அந்தச் சூழ்நிலையில் பழகிய பிறகு அந்த பந்த பாசங்களை அறுத்துக் கொள்ள முடியவில்லை. பொறுக்கிகள்கூடச் சுற்றுகிறேன் என்று என்னைப் பற்றிப் பேசவும் கேட்டிருக்கிறேன். வேறு யார் என்னோடு சுற்றுவார்கள்? அதைத்தானே திருப்பிக் கேட்கத் தோன்றுகிறது.

அவர்கள் பார்வையில் அவ்வாறு அவர்கள் படலாம். அவர்களைப் போக்கிரிகள் என்றும் அழைக்கக் கேட்டிருக்கிறேன். அவர்கள் பார்வையில் அப்படிப்படுகிறார்கள். என் பார்வையில் அவர்களும் மனிதர்கள்தான் என்று நினைக்கச் செய்கிறது.

அந்த ரயிலடியில் மனித சஞ்சாரம் நீங்கிவிடும். ரயில் சஞ்சாரமும் அடங்கிவிடும். ரயில் அதிகாரிகள் குளிருக்கு அஞ்சி அடக்கமாக உள்ளே போய்விடுகிறார்கள். அந்தப் பரந்த இடம் அப்புறம் எங்களுக்குத்தான் சொந்தம். பெஞ்சுகளில் படுத்துக் கொள்வோம். யாரும் கேட்கமாட்டார்கள். மேலே அழகான கூரை; கீழே சிமெண்டுத் தரை; காற்று வசதிக்குக் குறைவு இல்லை. நாங்கள் யாருக்கும் 'குடிக்கூலி' கொடுக்க வேண்டுமே என்ற அவசியம் இல்லை. மறுபடியும் நினைத்துப் பார்க்கிறேன். பங்களாக்களில் வசிக்கிறவர்களும் நிம்மதியாகத் தூங்குகிறார்கள்; நாங்கள் அடைக்கக் கதவே இல்லை. அவர்கள் எங்களை நினைத்து அஞ்சுகிறார்கள். நாங்கள் யாரை நினைத்தும் அஞ்சுவதில்லை. நாங்கள் அவர்கள் வீடுகளில் புகுந்து திருடுவோம் என்று நினைக்கிறார்கள். நாங்கள் அவர்களைப் பற்றி நினைப்பதில்லை. 'திருடு' என்ற பயம் இல்லாமல் தூங்குகிற மனிதர்கள் இருக்கிறார்கள் என்றால் அது நாங்கள்தான். நான் அவர்களோடு ஒன்று ஆகிவிட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/45&oldid=1461953" இலிருந்து மீள்விக்கப்பட்டது