பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

அவற்றை அடைந்திட கட்டுப்பாடுகள் உண்டு. கடுமையான தடைகள், சோதனைகள், விதிமுறைகள், வழிநடத்தும் வழி முறைகள் எல்லாமே நிறைய உண்டு.

வாழ்க்கையில் இன்ப துன்பம் இருக்கின்றன. வெற்றி தோல்வி இருக்கின்றன. இவைகள் விளையாட்டுக்களிலும் உண்டு. அல்ல அல்ல அவைகள் தாம் எல்லாமும்.

வாழ்க்கை உலகில் எதிர்ப்புக்கள், ஏமாற்றங்கள், பாதிப்புக்கள், நெருக்கடிகள், பதமான சூழ்நிலைகள் எதிர்ப்படுவது போலவே, விளையாட்டு உலகிலும் உண்டு.

நாம் ஒன்றை மட்டும் உறுதியாக உணர வேண்டும்.

வாழ்க்கை என்பது ஓர் அழகான கிண்ணம். அதில் விளையாட்டு என்னும் மகாசக்தி நிறைந்த மகிழ்ச்சியை அளிக்கின்ற சுவையான பழரசம் ஊற்றப் பட்டிருக்கிறது.

எண்ணத்தில் தேர்ந்து, கிண்ணத்தை எடுத்துப் பருகுவோர், உடல் வண்ணத்தில் பொலிவும், நினைவுகளில் தெளிவும், நிலையில் வலிவும் கொண்டு நிம்மதியுடன் வாழ்கின்றனர்,

பழரசத்தைப் பழித்து, புழுதியிலே ஊற்றுவோர், பெறுகிற பயன்களையெல்லாம் இழந்து, கிண்ணத்தையும் கவிழ்த்துக் கொண்டு காலாவதியாகிப் போகின்றனர்.

இவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்றால், வைக்கோல் போரில் படுத்துக் கொண்டு, மாட்டையும் தின்னவிடாமல் குலைத்துக் கொண்டு, தானும் தின்னமுடியாமல் அதன்மேல் படுத்துக் கொண்டு கிடக்கும் தெரு நாய் போன்றவர்கள்.