பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
68


தவம் செய்யத் தனிமை, உயிர்வாழ கொஞ்சம் உணவு. அதற்காக காய் கனிகள் கிழங்குகள் போன்ற உணவு. விழிப்போடு இருந்து ஜெபம் செய்யும் பண்பு.

இந்த மூன்றும் துறவிகளுக்கு மட்டுந்தான் சொந்தமா? அல்லவே! உலகின் உயிர் வாழும் மனிதர்கள் அனைவரும் உடன்பாடு கொண்டு, ஒழுகவேண்டிய பண்புகளல்லவா இவைகள்!

வாழ்க்கையும் விளையாட்டும் ஒன்றுதான் என்று கூறுகின்றோமே? அதற்கு சான்றாக அல்லவா இந்த மூன்று பண்புகளும் மிளிர்கின்றன.

விளையாட்டுப் போட்டிகள் மாலை மணிக்கு நடக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அந்தப்போட்டிகளில் பங்கு பெறும் வீரர்களும் வீராங்கனைகளும், துறவிகள் போலல்லவா தங்களைத் தயார் செய்து கொண்டு காத்திருக்கின்றார்கள்.

2 மணிக்குப் போட்டிகள் என்றால், பகல் 12 மணிக்கே கொஞ்சமாகச் சாப்பிட்டுவிட்டு, பசித்திருக்கக் காத்து கொண்டிருக்கின்றார்கள். அதிகமாக உண்டுவிட்டால் அசதிதான் வரும், திறமைகளை வெளிப்படுத்தும் திறனும் ஆற்றலும் மிகுதிபடாமல் குறைந்து போகும். இதற்காகத்தான் அளவாக உண்டு ஆற்றலை வெளிப்படுத்திக்காட்டும் விழிப்புணர்வோடு காத்திருக்கின்றார்கள்.

அதோடு மட்டுமல்ல, தாங்கள் என்ன செய்யவேண்டும், எப்படி அணுகுமுறைகள் அமைய வேண்டும். எதிர்த்திடுவோரினை எப்படி வெற்றி காணவேண்டும் என்றெல்லாம் தனித்திருந்து திட்டம் தீட்டுகின்றனர்.

இப்படிப்பட்ட துறவிகள் பின்பற்றும் தூய வழியினை விளையாட்டுக்களில் பின்பற்றுபவர்களே, தீரர்களாகவும், சிறந்த திறமையாளர்களாகவும் புகழ் பெறுகின்றார்கள்.