பக்கம்:அறநிலையங்கள், சொற்பொழிவு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

அறநிலையங்கள்

என்று பாடுவதற்குப் பழக்கிவைத்தார். ஒருசமயம் கிருஷ்ணதேவராயர் திருவாரூர் வந்தார். அவரிடத்தில் தான் வளர்த்த கிளியினைத் தூது விட்டார். அந்தக் கிளி, அரசனிடம் சென்று, அச்சிவபக்தன் கூறியதை அப்படியே கூறிற்று. அரசன் அது விஷயத்தை ஆராய்ந்து உண்மையறிந்து, நாகராஜ நம்பியை, நாட்டின் எல்லைக் கப்பால் துரத்திவிட்டார். நான் குறிப்பிட்டப் பாடல் நாஸ்திகர் இயற்றியதல்ல, தனிப்பாடலில் இருக்கிறது; இன்றும் காணலாம்.

இரட்டைப் புலவர் என்று இரு புலவர்கள் இருந்தார்கள். இவர்களில் ஒருவர் குருடர், மற்றொருவர் முடவர். முடவரைக் குருடர் தன் தோள்மீது ஏற்றிக் கொண்டு, ஊர் ஊராகப் பிரயாணம் செய்வார்கள். ஒருசமயம் இவர்கள், கோயமுத்தூர் ஜில்லாவிலே உள்ள ஈங்கூருக்குச் சென்றார்கள். பசி காதடைத்ததால் அங்குள்ள சிவபெருமான் கோவிலுக்குச் சென்றார்கள். அர்ச்சகர் ஆராதனை காட்டிவிட்டு, தட்டின்மேல் துணியை மூடி, எடுத்துச் சென்றுவிட்டார். இவர்களுக்குப் பிரசாதம் ஒன்றும் கொடுக்கவில்லை. உடனே குருட ராகிய புலவர்:--


"தேங்குபுகழ் சங்கூர் சிவனே - வில்லாளி அப்பா

நாங்கள் பசித்திருக்க நியாயமோ?'

என்று சிவபெருமானை வேண்டினார். உடனே சிவபெருமான் விடையளிப்பது போல, முடப்புலவர்,


"போங்காணும் கூறுசங்கு, தோல்முரசு

கொட்டுஓசை அல்லாமல் சோறுகண் டமூளியார் சொல்"

என்று பாடினார். இதிலிருந்து, அக்காலத்திலேயே கோயில்