பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

மானிடர்க்கு விழுப்பம் தருவது ஒழுக்கம். உயர்ந்தோர் போற்றியன புரிந்து வெறுத்தன விலக்கிச் செய்யும் சிறந்த முறையே அறமெனப்படும். உலகிலேயே அறத்திற்கும் அற நூல்களுக்கும் பெரு மதிப்பு அளித்து அவற்றின் வழி நடக்கும் நாடு இப்பாரத மணித் திருநாடே என்று கூறலாம்.

தமிழ் மொழியில் அற நூல்கள் மலிந்துள்ளன. வள்ளுவர் தந்த தெள்ளுதமிழ்க் குறளைப் போன்றதொரு சிறந்த நூல் உலகிலேயே வேறு எந்த மொழியிலும் கிடையாது. இதைத் தமிழராய நாம் கூறவில்லை. மேனாட்டறிஞர்கள் பலர் இக்கருத்தினைத் திரும்பத் திரும்ப வற்புறுத்திக் கூறியுள்ளனர். வள்ளுவர் போல அறத்தின் சிறப்பை வலியுறுத்தியவர்கள் ஒளவையார், அதிவீரராமர், குமரகுருபரர், சிவப்பிரகாசர் போன்றோர். அவர்களைப் பற்றியும் அவர்கள் நூல்களில் கூறப்பட்டுள்ள அறநெறி களைப் பற்றியும் இந் நூல் தெளிவாகவும் சுருக்கமாகவும் விளக்கியுள்ளது.

இத்தகையதொரு பயனுடைய நூலை இயற்றித் தந்தவர் வித்துவான், திருக்குறள்மணி அ. க. நவநீத கிருட்டிணன் ஆவர். யாம் வேண்டுவனவற்றை வேண்டியவாறே எழுதிக்கொடுத்து வரும் அவருக்கு எம் நன்றி உரியதாகுக.

இந் நூல் இளஞ்சிறார்க்கேற்ற நூல், பள்ளியில் பாட நூலாகப் பயில்வதற்கு ஏற்ற நூல். இதனை மாணவர் கற்றுத் தெளிந்து பயன்பெறுவரென எண்ணுகிறோம்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.