பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளதுஅணிந்துரை

தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் தனிப் பெருமையைத் தருவன தமிழில் தோன்றியுள்ள அற நூல்கள் ஆகும். இளஞ்சினாரும் பயிலத்தக்க ஆத்திசூடி முதல் திருக்குறள் ஈறாக எண்ணற்ற நீதி நூல்கள் தமிழில் எழுந்துள்ளன, அவற்றில் உள்ள சில தொடர்களையும், சில பாடல்களையுமே படிக்கும் வாய்ப்பினைச் சிறுவர் பெறுகின்றனர். அவற்றைப் பற்றிய தெளிவான வரலாறுகளையும், அவற்றின் அரிய கருத்துக்களையும், உரிய சிறப்புக்களையும் அச்சிறுவர்கள் அறிவதற்கு வாய்ப்பில்லை. அத்தகையதோர் அரிய வாய்ப்பினை அறநூல் தந்த அறிவாளர்' என்னும் இச்சிறு நூல் இளைஞர்க்கு வழங்குவதுடன், அந்நூல்கள் அனைத்தையும் ஓதியுணர்தல் வேண்டும் என்னும், ஆர்வத்தையும் உறுதியாக உண்டுபண்ணும்.

இத்தகைய நன்னோக்கத்துடன் ஆக்கப்பெற்ற இச்சின்னூலைத், தமிழைப் பல்லாற்றானும், நல்லாற்றானும் வளர்ப்பதையே தலையாய கடனாகப் பூண்ட தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியாளரும் அருந்திறல் மாட்சியாளருமாகிய திருவாளர், வ. சுப்பையா பிள்ளை அவர்கள் அன்படன் வெளியிட்டு எளியேனைத் தமிழ்ப் பணிக்கு ஆளாக்கியுள்ளனர். அன்னவருக்கு என் உளங் கனிந்த நன்றி வணக்கங்கள் என்றும் உரியன.

தமிழகத்தில் உள்ள பெரும் பள்ளித் தலைவர்களும் அருந்தமிழ்ப் புலவர்களும் தத்தம் பள்ளிகளில் இந்நூலைப் பாடமாக்கி, எளியேனது. தமிழ்ப்பணிக்கு ஊக்கமூட்டுமாறு பணிகின்றேன்.

தமிழ் வெல்க!

அ. க. நவநீதகிருட்டிணன்