பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறநெறி அருளிய குருபரர்

71


மனம் குளிரக் கேட்டு மகிழ்ந்தாள். மன்னரின் கழுத்தில் கிடந்த முத்தாரத்தைக் கழற்றினாள், அதனைக் குமரகுருபரர் கழுத்தில் அணிந்தாள், ‘சைவம் வாழத் தெய்வக் கவிஞனாய் வாழ்க’ என்று வாழ்த்தி மறைந்தாள்.

குருபாருக்குப் பொன் முழுக்கு

மீனாட்சியம்மையின் அருட்செயலைக் கண்டு எல்லோரும் வியப்பு அடைந்தனர். இதனைக் கண்ட மன்னர் அளவற்ற மகிழ்ச்சியும் இன்பமும் அடைந்தார். குமரகுருபரரின் பெருமையை அறிந்து வியந்தார். பிள்ளைத்தமிழ் அரங்கேற்றம் சிறப்புடன் முடிந்தது. மன்னர், கவிஞராகிய குமரகுருபரரைத் தம் மாளிகைக்கு அழைத்துச் சென்றார். அவரைப் பொன்னால் செய்த ஆசனத்தில் அமரச் செய்தார். பொன்னாலும் மணியாலும் அவர் திருமேனியை முழுக்காட்டினார். அவர் திருவடியில் வீரக்கழலைச் சாத்தினார். யானை, குதிரை, சிவிகை, குடை, கொடி முதலிய பல விருதுகளையும் அவருக்கு வழங்கினார். சில காலம் அவரைத் தம் மாளிகையில் தங்கிச் செல்ல வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.

மன்னருக்குத் திருக்குறள் விளக்கம்

மன்னரின் வேண்டுகோளுக்கு இணங்கிய குமரகுருபரர் அங்கேயே சில நாட்கள் தங்-