பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறநெறி அருளிய குருபரர்

73


ஆயிரத்து முந்நூற்று முப்பது அரிய குறட்பாக்கள் உள்ளன என்றும் உரைத்தார். அப்படியானால் அந்த நூலின் கருத்துக்களைச் சுருக்கித் தாங்கள் ஒரு சிறு நூல் ஆக்கித் தந்தருள வேண்டும் என்று அரசர் வேண்டினார். அவ்வாறே செய்து முடிப்பதாகக் கூறினார் குமரகுருபரர். அன்றே ‘நீதிநெறி விளக்கம்’ என்ற அரிய அறநூலைப் பாடத் தொடங்கினார். சில நாட்களில் அதனை முடித்து அரசரிடம் கொடுத்தார்.

அறநூலுக்கு அரசரின் பரிசு

அந்நூலில் அமைந்த கருத்துக்களை எல்லாம் குமரகுருபரர், அரசருக்கு விளக்கினார். உலகப் பொதுமறையாகிய திருக்குறளின் உயர்ந்த உண்மைகளைச் சிறியதொரு நூலால் விளக்கிய அவர் திறமையை அரசர் பாராட்டினார். ஆண்டு ஒன்றுக்கு இருபதினாயிரம் பொன் வருவாய் உடையது அரியநாயகிபுரம் என்னும் ஊர். அதனைக் குமரகுருபரருக்கு நன்கொடையாகக் கொடுத்தார். இத்தகைய பெரும் பரிசு ஒன்றைப் பெற்ற அருந்தமிழ் அறநூல் ‘நீதிநெறி விளக்கம்’ ஆகும். இதனை அறிஞர்கள் ‘குட்டித் திருக்குறள்’ என்று கொண்டாடுவர்.