பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. என். அண்ணாதுரை

17



போர் துவக்கப்படும் என்று. கடமையைச் செய்வதிலே எஃகு போன்ற உள்ளமும், நீதி வழங்குவதிலே துலாக்கோல் போன்ற மனோநிலையும், எளியோர் விஷயத்தில் இளகிய மனமும் இருத்தல்வேண்டும், ஒரு ஆட்சி பிறரால் போற்றப்பட வேண்டுமானால்.

ஆட்சியைப் பிடித்துக்கொள்ள ஆஷாடபூதி வேஷமிட்டு நின்று, நல்வாக்குக் கூறி, நான் உமக்கு ஊழியம் செய்யவே அனுமதி கேட்கிறேனே ஒழிய, ஊராளும் பதவியா கேட்கிறேன் என்று உள்ளம் உருக்கும் பேச்சுப் பேசி, பதவியில் அமர்ந்துகொண்டதும், தமக்கும் பதவிக்கும் ஏதோ பரம்பரை பாத்தியதை இருப்பதுபோல எண் ணிக்கொண்டு, பிடி! அடி! சுடு! என்று பிதற்றிக்கொண்டு, யார் எத்தகைய நியாயமான விஷயத்தைச் சொன்னாலும், நீதிக்காக வாதாடினாலும் அவர்கள்மீது அடக்குமுறையை வீசி, அட்டகாச வாழ்வு நடாத்தியதால், அவதியுற்று அழிந்த பல ஆளவந்தார்களின் தொகுப்புநூல், சரிதம் ஆள வருவோருக்கு அற்புதமான வழிகாட்டி--எச்சரிக்கை--ஒரு வரலாறு--ஆனால், நமது ஆட்சியாளர்கள், நாள் தவறாமல் 'இந்தியன் பினல் கோடைப்' புரட்டிப் புரட்டிப் பார்த்து, யாரார் மீது என்னென்ன செக்‌ஷன் வீசலாம், எந்தெந்தப் பத்திரிகைக்கு ஜாமீன் கேட்கலாம், எங்கெங்கு தடை உத்தரவுகள் பிறப்பிக்கலாம் என்று படித்துத் தெரிந்து கொள்வதிலே அக்கரை காட்டுகிறார்களே தவிர, உலக வரலாற்றுச் சுவடியைப் படித்துத் தமது உள்ளத்தைத் திருத்திக்கொள்ள முயற்சிப்பவர்களாகக் காணோம்.

ஆச்சாரியார் ஆட்சி செய்துகொண்டிருந்தாரே, அன்று இருந்ததைவிட இன்று காங்கிரசுக்கு, பலம் அமோகமாக வளர்ந்திருக்கிறது என்பதை நாம் அறியாமலில்லை.--

8