பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. என். அண்ணாதுரை

19



திரிகைகளைத் தடுத்தும்---பேசுவோர்க்கு வாய்ப்பூட்டுச் சட்டமிட்டும், துப்பாக்கியைக் காட்டியும்தான், நாட்டிலே இதுபோது ஆட்சி செய்ய முடிகிறது---இதை அவர்கள் அறிவதில்லை---நாம் அறிவோம். நடைபெறுவது, அஹிம்சைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி அல்ல என்பதை நாம் நன்றாக அறிவோம். அன்று, தமிழ்மொழி, கலை, ஆகியவைகளிலே, உள்ளூரப் பற்று இருந்தாலும், வெளியே காட்டிக்கொள்ளவோ, அதற்காகப் போரிடவோ முடியாத நிலையில் ஆயிரமாயிரம் தமிழர்கள் இருந்தனர்---சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம், ஏகாதிபத்தியத்துடன் எதிர்த்துப் போரிடுகிறோம்--நாட்டு விடுதலைக்குப் போரிடும் பெரும் பணியிலிருக்கும் எமக்குத் தமிழ் மொழி, கலை என்பன போன்றவை சில்லரைப் பிரச்சினைகள் என்றே தோன்றுகின்றன. எனவே, நாங்கள், அவைகளில் ஈடுபடமாட்டோம்; தமிழ் மொழியை, தமிழ்க் கலையை, தமிழ் இனத்தைப் பாதுகாக்க முடியும் எங்களால், தக்க சமயத்தில், தக்க விதமாக! இது விடுதலைப் போர்க்காலம்; மொழிப் பிரச்சினைக்காக மோதிக்கொள்ள இதுவல்ல நேரம்! இது அன்னிய ஆட்சியின் பிடியிலிருந்து நாட்டை மீட்கவேண்டிய மகத்தான போர்புரியும் காலம்; மற்ற விஷயங்களைக் கவனிக்க இதுவல்ல நேரம்! --என்று கூறினர்--சிலர் சாக்குக் கூறினர்--ஆனால் பலர் உண்மையாகவே, இந்தக் கருத்துடன்தான் இருந்தனர். எனவே அவர்கள், மொழிப் போர் நடைபெற்றபோது, ஆடவரும் பெண்டிரும், குழந்தையும் கிழவரும், சிறை சென்றபோது, தாலமுத்துவும் நடராஜனும் இறந்தபோது கண்ணீர் பெருக்கெடுத்தது என்றாலும், துடைத்துக்கொண்டு, துரைமார்களை எதிர்க்கும் தூய போரில் ஈடுபட்டு, தாய்மொழிப் போரில் ஈடுபடாமலிருந்துவிட்டனர். அது அன்று ! இன்று? அன்று