பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

றப்போர்

தமிழ்நாட்டில் இந்தி கட்டாய பாடமாக இருக்க வேண்டுமென்று கருதுபவர்கள் தங்களுடைய தவறை உணரும்படி செய்வதும் இன்றியமையாததாகும்.

வட இந்தியருள்ளும் ஒரு சிறு பகுதியினரால் மட்டும் பலப்பல மாறுதல்களுடன் பேசப்படுவதும், இற்றைக்கு 500ஆண்டுகளுக்குள்ளாகவே சமஸ்கிருதம், உருது முதலான மொழிகளிலிருந்து எடுக்கப்பட்ட சில எழுத்துக்களையும், சொற்களையும் கொண்டு உண்டாக்கப்பட்டதும், பழைய அறிவு நூற்செல்வம் இல்லாததுமான ஒரு கலப்புச் சிதைவு மொழியாகிய இந்தி மொழியை இவ் இந்தியா முழுவதுக்கும் பொதுமொழியாக வைத்துவிடலாம் என்பது ஒரு சிலரின் நோக்கம். இவ்வாறான ஏழை மொழியாகிய ஒரு புது மொழியை இந்தியாவிலுள்ள எல்லாப் பள்ளிக் கூடங்களிலும் கட்டாய பாடமாக்கி அதனை இந்தியாவிற்கே ஒரு பொது மொழியாக்கிவிடலாம் என்று நினைந்து, அத் துறையில் பெருமுயற்சி எடுத்துக்கொண்டிருக்கும் சில தலைவர்கள் நாம் கீழே தரும் வினாக்களுக்குத் தக்க சான்றுகளுடன் விடைகள் அளித்த பின்பே அவர்கள் அதனை நம் மக்கட்குக் கட்டாயப்படுத்தும் பெரு முயற்சியில் ஈடுபட வேண்டுமாய் விண்ணப்பித்துக் கொள்கின்றோம்:—