பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி.என்.அண்ணாதுரை

37



சரின் வாயிலிருந்து உதிர்ந்த முத்துக்கள். முதலமைச்சராக இருப்பானேன்--எங்காவது மூலைக் காளிகோயிலிலே பூசாரியாக அமரலாமே! இப்படிப்பட்ட இலட்சணமான பதில்களுக்கு அங்கு நல்ல மதிப்புக் கிடைக்குமே என்று கூறத் தோன்றுகிறது. ஆனால் ஓமந்தூரார் ஓரளவுக்குத் திராவிடப் பண்புடன் உள்ளவர் என்று கூறுகிறார்களே என்ற எண்ணம் வந்து, நம்மைத் தடுக்கிறது கேட்க, எதிர்க்க யாரும் இல்லை! யார் துணிந்து கேட்டாலும் அடக்கிவிடச் சட்டமும், சட்டம் தரும் ஆயுதமும் இருக்கின்றன! பாமரரைப் பசப்ப, பத்திரிகை பலம் இருக்கிறது என்ற காரணத்துக்காக, இவர்கள் எப்படி வேண்டுமானாலும் ஆண்டுகொண்டிருப்பது, அனைவரும் நாமென்ன செய்வது என்று இருந்து விடுவது என்ற நிலைமை வளர்ந்தால் அதற்குப் பெயர், பாசிசம்தானே! பாசமும் பயமும் ஒன்று கூடினால் பிறப்பது பாசிசம்--அது பாமர மக்களைப் பாழ்படுத்தும் நஞ்சு. நம்மை அந்த நஞ்சு கொல்லா முன்னம், நாம் அதை நசுக்கியாக வேண்டும். பக்கிங்காம் கர்னாடிக் ஆலைத் தோழர்களை, அந்தப் பாசிசம் படாத பாடு படுத்திற்று. தலைவர் திரு. வி. க. வை, அந்தப் பாசிசம், வீட்டிற்குள் அடைத்து வைத்தது. கோவைத் தொழிலாளர்களின் கும்பியில் நெருப்பைக் கொட்டிற்று அந்தப் பாசிசம். உழவர்களின் உள்ளத்தில் ஓராயிரம் ஈட்டிகளைச் சொருகுவது போலத் தொல்லை தந்தது அந்த பாசிசம்! அதன் கொடுக்குகள், இங்கு இல்லை. ஒரு இடத்தில்---இல்லை---இந்திய பூபாகம் முழுவதும் பரவி இருக்கிறது. ஒரு பத்துக் குடும்பத்தார், இட்டது சட்டம், நினைத்தது நியாயம் என்ற நிலைமையை ஏற்படுத்தி விட்டது! சமதர்மத்தை, சம உரிமையைக் கேலிக்குரிய பேச்சாக்கி விட்டது! புல்லை வீசிவிட்டோம் கீழே; இனி வாளை எடுத்திடுவோம் என்று வரட்டுத் தலையரும் கூவிடும் நிலை பிறந்தது