பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி.என்.அண்ணாதுரை

41


 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அதே சூழ்நிலைதான் இன்றும் நம் கண் முன் காணப்படுகிறது. அக்காலத்தில் நாம் தமிழின் இனிமை குறித்தும், தொன்மை குறித்தும் பலவாறு பேசியும், எழுதியும் இருக்கிறோம். அவை இன்று தமிழ்நாடு எங்கணும் கிராமந்தோறுங்கூட பரவி நிற்கிறது. ஆகவே அதைப்பற்றிப் பேச வேண்டிய அவசியம் இனி இல்லை. தமிழ் மணம் எங்கணும் கமழ்கின்றது. தமிழ் மக்கள் யாவரும் ஆர்வத்தோடு திகழ்கின்றார்கள். அவர்கள் வேண்டி நிற்பது புதியதோர் புரட்சிதான். சென்ற இந்தி எதிர்ப்பில் ஆண்களும்,பெண்களும், ஆடும் குழந்தைகளோடும், அடைகாக்கப்படும் குழந்தைகளோடும் சிறைபுகுந்துள்ளனர். தாலமுத்துவின் மனைவியாரும், நடராஜனின் மனைவியாரும் தமது தாலிகளையே அரசாங்கத்தினருக்கு அறுத்துக் கொடுத்திருக்கின்றனர். ஆகவே அரசாங்கத்தினருக்கு இந்திக்கு இந்நாட்டிலுள்ள எதிர்ப்பு தெரிந்தே இருக்கிறது. தமிழின் தனிச் சிறப்பும், ஹிந்தியின் தனி இழுக்கும் கூட ஆட்சி புரியும் அவினாசியாருக்குத் தெரிந்துதான் இருக்கும். இதுவரை அவர் தெரிந்துகொள்ளவில்லையானால், இனிமட்டும் எப்படித் தெரிந்துகொள்ளப் போகிறார்! ஆகவே, இவைபற்றிப் பேசிக்கொண்டிருந்தால் இம்மாநாடு ஒரு பயனற்ற மாநாடாகவே முடிந்துபோம்!

வந்த சண்டையை விடமாட்டோம் !

தமிழர்கள் வம்புச் சண்டையில் ஈடுபடுபவர்கள் அல்ல. ஆனால், வந்த சண்டையை விடாதவர்கள். ஆட்சியாளரின் ஆணவத்திற்கு அடி பணிவதும் அருமைத் தமிழினத்தவரின் பண்பல்ல. எனவே, அறப்போர் தொடுக்கத்