பக்கம்:அறவோர் மு. வ.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

99

களுக்குக் கலைவடிவம் வழங்கியுள்ளார். வள்ளுவரையும், திருமுலரையும், தாயுமானவரையும், விவேகானந்தரையும், இராமதீர்த்தரையும், பாத்திரங்கள் வழியே நினைவுகூர்ந்து தமிழ் நாவல் வரலாற்றில் டாக்டர் மு. வ. ஒர் அற நாவலாளராகத் (Novelist of Ethics) தோன்றிய போதிலும், சமுதாயத்தின் ஒவ்வொரு பகுதியினரின் வாழ்க்கையின் ஒவ்வோர் அசைவையும் அணுகிப் பார்ப்பதில் ஒரு சமுதாயக் கலைஞராகவே விளங்கியுள்ளார்.

டாக்டர் மு. வ. படைப்பிலக்கியப் பரப்பில் அகல உழுதவர் அல்லர்; ஆழ உழுதவர். பரப்பைச் சுருக்கிக் கொண்டபோதிலும் பார்வையை ஆழமாக்கிக் கொண்டவர். அவர்தம் சமுதாய மேம்பாட்டுச் சிந்தனை அறக் கண்ணோட்டத்தோடு ஆன்மிகப் பார்வை இணைந்திருந்ததோடு, உலகப் பார்வையோடு ஒட்டிச்செல்கின்ற புதுமையும் கொண்டதாகும். அவர்தம் கலைகள் நிகழ் காலத்தின் விளைச்சல்கள்; கருத்துகள் எதிர்காலத்தின் விதைநெற்கள் எனல் பொருந்தும்.

சமுதாய நோக்கும், கலைத் தரமும் கெழுமிய மு. வ. வின் நாவல்களில் வழங்கப்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் பாத்திரப் படைப்புகளுக்கேற்பவும், உரையாடல் உத்திமுறை வழியும் நாவல் கட்டுக்கோப்பின் எல்லையிலிருந்தே எடுத்துரைக்கப்பட்டுள்ளன. நோக்கு நிலையில் கதையைச் செம்மையுற அமைத்த டாக்டர் மு.வ. பண்பாட்டு அடிப்படையில் மரபுகளையொட்டி நாட்குறிப்பு, கடிதம் உத்தியைக் கொண்டு பாத்திரங்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கும் திறன் வியக்கத் தகுந்ததாகும். நாவலில் அமைந்துள்ள ஆசிரியர் நடையில் தெளிவையும் எளிமையையும் அமைத்து, பாத்திரங்களில் நடையில் உணர்வுகளின் உயிர்த்துடிப்பை வெளிப்படுத்தித் தம் நாவல்களுக்குக் கலை நலம் சேர்த்துள்ளார் டாக்டர் மு.வ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/102&oldid=1224111" இலிருந்து மீள்விக்கப்பட்டது