பக்கம்:அறவோர் மு. வ.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 165

இதை எழுதும்போதே எனக்குச் சிலப்பதிகாரம் நினைவுக்கு வருகின்றது. அன்பும் இரக்கமும் அருளும் கொடையும் மிகுந்தவனாகிய கோவலனுடைய உள்ளம் இசையிலும் கூத்திலும் எவ்வளவு ஆர்வம் உடையதாக இருந்தது. இதைக் கண்ணகி உணர்ந்து அந்தக் கலைகளைத் தானும் கற்றிருந்தால், கணவனுடைய உள்ளம் கலையரசியாகிய இன்னொருத்தியை நாடாதவாறு தடுத்திருக்கக் கூடுமே என எண்ணுகிறேன்.”57

கருத்தை விளக்கும் திறன்

கூறவந்த கருத்தினைப் படிப்பவர் மனத்தில் பசுமரத் தாணியெனப் பதியும் வண்ணம் விளக்கமுற எடுத்து-மொழியும் உணர்த்தும் திறனில் இவர் சங்க இலக்கியங்களில் இடம்பெறும் ’தோழி’ போன்று காட்சி தருகின்றார். சான்றுக்குச் சில எடுத்துக்காட்டுகள்:

”புதிதாகப் பழகும்போது பெரும்பாலோர் நன்றாகப் பழகமுடியும். அதில் ஒன்றும் சிறப்பு இல்லை; திறமை இல்லை. புதிய மாணவர் ஒழுங்காக நடந்து கொள்வார். புதிய ஆசிரியர் பாடுபட்டுக் கற்றுக்கொடுப்பார். புதிய வியாபாரி நல்ல சரக்கு விற்பார். புதிய வேலைக்காரி நன்றாக உழைப்பாள். புதிய பால்காரன் நல்ல பால் தருவான். புதிய நட்பும் இனிமையாக விளங்கும். அதில் ஒரு சிறப்பும் இல்லை. இந்தப் புதுமையை எள்ளி நகையாடுவதுபோல் ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருப்பது உனக்கு நன்கு தெரியும். புதிய துடைப்பம் நன்றாகப் பெருக்கும் என்னும் அந்தப் பழமொழி வேடிக்கையாக இருந்தாலும், கருத்து உடையதுதான். அதற்கு மாறாக, எவ்வளவு பழமை ஆனபோதிலும் சிறப்புக் குன்றாமல் ஒளிவிடும் வாழ்க்கைதான் நல்ல வாழ்க்கை என்று சொல்வேன். இக்காலத்துப் பலருடைய வாழ்க்கை பொன்முலாம் பூசிய பொருள்போல் தொடக்கத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/168&oldid=1462069" இலிருந்து மீள்விக்கப்பட்டது