பக்கம்:அறவோர் மு. வ.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

201

★ பெண்கள் முன்னேற வேண்டும். பெண்கள் முன்னேறா விட்டால் நாடு இப்படியேதான் இருக்கும். பெண்களுக்குத்தான் படிப்பு வேண்டும். இன்னும் இரண்டு தலைமுறைகளுக்கு ஆண்களுக்குப் பள்ளிக்கூடம் இல்லாமல் மூடிவிட்டாலும் குறை இருக்காது. எல்லாப் பெண்களும் படித்த காலத்தில்தான், இந்த நாட்டில் அறியாமை ஒழியும். பெண்களுக்கு நல்லறிவு வந்தால் தான் மூடநம்பிக்கை நாட்டை விட்டு ஒழியும். இல்லையானால் வீட்டுக்கொரு விவேகாநந்தர் பிறந்தாலும் இப்படியேதான் குருட்டு வாழ்க்கை நிலையாக இருக்கும்.

★ தமிழர்கள் உணர்ச்சி அளவில் ஊக்கம் மிகுந்தவர்கள்; வாய்ச்சொல் அளவில் வீரம் மிகுந்தவர்கள்; இந்த இரண்டும் மட்டும் பெற்றவர்களால் ஒரு நாடு முன்னேற்றம் அடைய முடியாது. கடமை ஒழுங்கு ஒன்று வேண்டும். இந்த ஒன்று மட்டும் இருந்து, மற்ற இரண்டும் இல்லாதிருந்தாலும் கவலையில்லாமல் தமிழ் நாடு எப்போதோ தலையெடுத்திருக்கும். நீ ஒரு தமிழன்; பழங்காலப் பிற்போக்குத் தமிழனாக இருந்து வாயால் மட்டும் விளங்காதே. உணர்வால் மட்டும் உயராதே. செயலாலே சீர்ப்படு.

★ மனம் பண்படுவதற்கு வழி என்ன? நமக்கு முன் பண்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவர்களின் வரலாறுகளைப் படிக்கவேண்டும். அவர்கள் சொன்ன சொற்களை, அல்லது எழுதி வைத்த எழுத்துகளைத் திரும்பத் திரும்பப் படித்து உணரவேண்டும். கெட்ட காற்றிலும் நீரிலும் உள்ள நோய்க்கிருமிகள் நம் உடம்பில் புகாமல் ஊசி போட்டும் மருந்து உண்டும் காத்துக்கொள்வது போலவே, கெட்ட நூல்களிலும் கெட்ட கலைகளிலும் மனத்தின் பண்பாட்டுக்கு ஆகாத நோய்க் கருத்துகள் உள்ளன. அவை மனத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/204&oldid=1224444" இலிருந்து மீள்விக்கப்பட்டது