பக்கம்:அறியப்படாத தமிழகம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

தொ.ப.வின் எழுத்துகளை மட்டும் படித்தவர்களின் மதிப்பீட்டிற்கும் அவருடன் நேர்ப்பழக்கம் உள்ளவர்களின் கொண்டாட்டத்திற்கும் உள்ள இயைபின்மை எனக்கு உறைத்ததுண்டு. நேராக அவருடன் பழகத் தொடங்கிய பிறகே நண்பர்களின் உற்சாகத்தை என்னால் புரிந்துகொள்ளவும் பகிர்ந்துகொள்ளவும் முடிந்தது. உரையாடும்போது அவரிடமிருந்து தெறிக்கும் கருத்துகளும் சான்று மேற்கோள்களும் வாழ்ந்து பெற்ற பட்டறிவும் உடனுரையாடுபவரை மலைப்பில் ஆழ்த்தக் கூடியவை. நாம் நன்கு அறிந்தது என்று நினைக்கும் விஷயத்தில் புதிய ஒளி பாய்ச்சுவதும் பழகிப்பழகிப் பொருளிழந்துவிட்டது என்று நாம் உணர்வற்று நோக்கும் ஒரு சொல்/தொடர்/பழமொழியிலிருந்து ஒரு சமூகப் புரிதலைச் சற்றும் எதிர்பாராத சமயத்தில் வழங்குவதும் தொ.ப.வின் கருத்துப் புலப்பாட்டு முறை. வானிலும் மண்ணிலுமாக மாய ஜாலங்களைக் காட்டும் இந்திரசித்தின் போர்முறையுடன் ஒப்பிடத்தகுந்தது இது. நட்பையும் பொறாமையினையும் அவருக்கு ஒருங்கே ஈட்டித் தருவதும் இதுதான்.

எழுத்து முறையினும் வாய்மொழி மரபில் வந்த தமிழ்ப் புலமை நெறியின் வழி இது. கேட்பவரின் எதிர்வினைக்கு ஏற்பக் களைகட்டும் இசைக் கச்சேரி போன்ற இப்புலப்பாட்டு முறை எழுத்து வடிவில் மிளிர்வதில்லை. நெடுங்கட்டுரை வடிவமும் நூல் உருவமும் இதற்குத் தோதாக இருப்பதில்லை. ‘அறியப்படாத தமிழகம் நூலில் கையாளப் பட்டிருக்கும் சிறுகட்டுரைத் தொடர் வடிவம் தொ.ப.வின் ஆளுமையை அதன் பலங்களோடும் பலவீனங்களோடும் பெருமளவுக்கு உருக்காட்டுவதாக அமைந்துள்ளது.

ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக் கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளன என்பதை ஒவ்வொரு கட்டுரையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. உப்பு, எண்ணெய், தேங்காய், வழிபாடு, விழாக்கள், உடை, உறவுமுறை, உறவுப் பெயர்கள் என அன்றாட வாழ்வின் பகட்டில்லாத பல்வேறு கூறுகளைக் கொண்டு தமிழ்ச் சமூகத்தின்