பக்கம்:அறிவின் கேள்வி.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

நிறைந்த கடவுள் உண்டா? என்று தன் மனத்தினுள்ளேயே கேட்டுக்கொள்ள வேண்டிய நெருக்கடி வராமல் போவதில்லை. சிந்தனை இவ்விதம் சந்தேகக்குரல் எழுப்புகிறபோது, பெரும்பாலோர் சிந்தனையை மேலும் வளரவிடுவதில்லை. அவர்களை அடிமைப்படுத்தியிருக்கும் பழமைக் கட்டுப்பாடுகள் தலைதூக்கும் சந்தேகத்தை மண்டையில் அடித்து ஒதுக்கிவிட்டு, கடவுளுக்குப் பஜனையும், நாமாவளியும் பாடுவதில் ஈடுபடத் தூண்டிவிடுகின்றன.

வரவர சிந்தனை வளர்ந்து வருகிறது. அதனால், சிந்தனையின் சந்தேகமும் ஓங்குகிறது. இதையாரும் மறுக்க முடியாது. என்றுமே பழமை இருளில் உலகைப் புதைத்துவிட்டு அறியாமையை அரியாசனத்தமர்த்தி அர்ச்சனைகள் செய்யலாம் என்று எவரேனும் எண்ணினால், அவர்களின் தவறை காலம் எடுத்துச் சொல்லும். சந்தேகம்தான் அறிவு வளர்ச்சிக்கு அடிப்படை. மக்கள் சந்தேகித்து, ஆராயத் தொடங்கிவிட்டார்கள் என்றால், உண்மயை நோக்கி அவர்கள் சிந்திக்கத் திரும்பிவிட்டனர் என்றுதான் அர்த்தம். அறிவின் உதயத்துக்கு அஸ்தமனச் சங்கு ஊதிவிடலாம் என எண்ணுவது வீண் கனவு.

அறிவின் திறமையும் சிந்தனை உண்மையும் வேகமாகப் பரவுவதில்லை. காரணம், மக்கள் இன்னும் முழு மனிதராக வாழக்கற்றுக் கொள்ளவில்லை. மனிதவர்க்கம் இன்னும் பிள்ளைப்பிராயத்திலேயே தவழ்ந்து கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். எனினும், துணிந்து, உண்மைக்காக உண்மையைக் காதலித்து, அறிவு விழிப்போடு ஆராய்ந்து தங்கள் எண்ணத்தைச் சொன்னவர்களுக்கும் குறைவில்லை. அத்தகைய அறிஞர்களின் சிந்தனை