பக்கம்:அறிவின் கேள்வி.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

நாட்டிலே நாத்திகம் பரவி வருகிறதாம். சம்பிரதாயக் குட்டையில் ஊறிய மட்டைகள் சீறுகிறார்கள். கண்டனங்கள் எறிகிறார்கள். ஆளவந்தாரை ‘அச்சோ ஆள்பவரே, ஆபத்து வந்ததையே!’ என்ற தன்மையில் பிரார்த்திக்கத் தயாராகிறார்கள். பத்திரிகைகளின் பக்கங்களிலே பத்தி பத்தியாய் எழுதியும், எங்கெங்கோ பேசியவர்களின் பிரசங்கங்களை அச்சிட்டும் தர்மத்தை, கடவுளை இன்னும் பலவற்றையும் பாதுகாக்கத் தவிக்கிறார்கள் பக்தர்களும், அவர்கள் பரம்பரையில் வந்த சிகாமணிகளும்.

காரணமென்ன? கடவுளைச் சந்தேகிப்பவர்களின் தொகை வளர்ந்து வருகிறதாம், கடவுள் இல்லை என்பவர்களும், ‘கடவுள் இருக்கிறாரா? உண்மையாகவா?’ என்று தலையைச் சொரிகிறவர்களும் சமுதாயத்துக்குத் தீங்கு இழைப்பவர்களாம்! அறிவியக்க வாதிகள் ஆபத்தானவர்களாம்.

இப்படிச் சொல்கிறவர்கள் தான் அறிவுக்கும் மனித வர்க்கத்திற்கும் நல்லது செய்கிறவர்களா என்ற சந்தேகம் சித்தனையாளர்களுக்கு எழாமல் போவதில்லை.

பார்க்கப் போனால், ‘நாத்திகம் பேசி நாத்தழும்பேறியவர்கள்’ இந்த விஞ்ஞான யுகத்தின் விளைவுகள் அல்ல. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஆண்டவனைப் பற்றி ஐயுறுவோரும் அவனியில் இருந்து வந்திருக்கிறார்கள். கண்மூடி அர்ச்சித்து 'அரகர' என்று கன்னத்தில் அடித்துக்கொண்டவர்கள் கூடவே கடவுளின் பெயரால், மதத்தின் வெறியால், பக்தியின் போர்வையால், கத்தியை உருவி ரத்தம் சிந்தத் துணிந்தவர்கள் மலிந்திருக்கிற காலத்திலேயே இருந்திருக்கிறார்கள் 'புத்தியை உபயோகிக்கக்கூடாதா?' என்று மக்களிடம் கேள்வி எறியத் துணித்தவர்களும்.