806 அதிர்வு
கின்றன. இவை வெப்ப இரட்டை (Thermocouple) மின்னழுத்தங்களை மிகைக்கப் பயன்படுகின்றன; ஒப்புமைக் கணிப் பொறிகளில் பெரிதும் பயன்படுகின்றன, இதன் சுற்றுவழிப் படம் 3இல் தரப்பட்டுள்ளது. நேர் மின்னழுத்தம் அலை அதிர்வியின் ஒரு தொடுகையில் மாறுதிசை மின்னழுத்தமாகக் குறிப்பேற்றப்படுகின்றது (Modulated). இந்த மின்னழுத்தம் தக்க மாறு மின்னோட்ட மிகைப்பிகளால் அளவு மிகச் செய்யப்படுகிறது. பிறகு இந்த அலை, அலையதிர்வியின் மற்றொரு தொடுகையால் குறிப்பிறக்கம் (Demodulation) செய்யப்படுகிறது. பிறகு தாழ்கடத்தல் (Low pass) வடிப்பியால் சீர் செய்யப்படும் போது அளவு மிகுந்த மூல உள்தருகை அலை பெறப்படுகிறது. இங்கு அலை அதிர்வி குறிப்பேற்றியாகவும் (Modulator) குறிப்பிறக்கியாகவும் (Demodulator) ஒரே நேரத்தில் செயல்படுகிறது.
படம் 3. அலை அதிர்வியால் நிலைப்படுத்திய நேர் மின்னோட்ட மிகைப்பி
நூலோதி
1. Tuner, L. W.. Electronic Engineer's Reference Book, 4th Edition, Butterworths, London, 1981 (Reprint).
2. McGraw-Hill Encyclopaedia of Science & Technology, vol. 14, 4th Edition, McGraw-Hill Book Company, New York, 1977.
அதிர்வு
பொருள்கள் பல காரணங்களினால் ‘இயக்கவியல் அதிர்வு’ (Mechanical vibration) அடைகின்றன. பொருள்கள் அதிர்வடையும் போது அவை அதிர்வடையக் கூடிய உரிமைப் படிகளையும் (Degress of freedom), ‘மீட்சியியல் பண்புகளையும்’ (Elastic nature), அடர்த்தியையும் (Density). இறுக்குத் திறனையும் (Compressibility), பரிமாணத்தையும் (Dimension) பொறுத்து அவற்றின் அதிர்வு, நேர் போக்கிலோ, நேர் போக்கில் இல்லாமலோ (Linear or Non-linear system) அமையலாம்.
மீட்சியியல் பொருள்களின் அதிர்வுகள் (Vibration of elastic bodies) நல்ல இசை ஒலிகளை உண்டாக்கும் இசைக் கருவிகளிலும், குரோனோமீட்டர், கடிகார இசைக்கவை, ஃபோனிக் மீட்டர் போன்ற கருவிகளிலும் பொதுவாக எல்லாப் பொருள்களிலும் உண்டாகும் அதிர்வுகளைப் பற்றி ஆய்வு நடத்தப் பயன்படுகின்றன.
காற்றுத்தம்பம் அதிர்வடைவதால் இசையொலி எழும்புகிறது. கம்பிகள் (Strings), அடித்தல், மீட்டுதல், வில்லால் உரசுதல் போன்ற முறைகளால் அதிர்வடையச் செய்யப்படுகின்றன. கம்பிகள் அல்லது கயிறுகளின் அதிர்வைப் பயன்படுத்தி சோனாமீட்டர் (Sonometer), மெல்டின் கம்பி (Melde's string) போன்ற அமைப்புகள் செய்யப்பட்டுள்ளன. இவை கம்பிகளில் உண்டாகும் குறுக்கதிர்வுகளைப் பற்றி அறியவும், அதிர்விகளின் அதிர்வெண்களை அளவிடவும் பயன்படுகின்றன. வீணை, பிடில் போன்ற கருவிகள் கம்பிகளில் அதிர்வுத் தத்துவத்தில் இயங்குகின்றன. சவ்வு (Membrane), இடைத்திரை (Diaphragm), தகடு (Plate) இவற்றின் அதிர்வுகள், தொலைபேசி, ஒலி பெருக்கி போன்ற கருவிகளிலும், மத்தளம் போன்ற இசைக் கருவிகளிலும் பயன்படுகின்றன. வளைந்த தகடுகளின் (Curved plate) பல வித அமைப்புகளின் அதிர்வுகள் பல வகையான மணிகள் (Bells) அமைப்பதில் பயன்படுகின்றன.
சட்டங்கள் (Bars) அல்லது தண்டுகளின் (Rods) அதிர்வுகள் இசைக்கவை (Tuning fork) போன்ற மிகப் பயனுள்ள கருவிகள் அமைப்பதில் பயன்படுத்தப்படுகின்றன. கடிகாரக்கவை, ஃபோனிக் மோட்டார், அதிர்வெண் மீட்டர் போன்ற ‘அதிர்வெண்களை’ அளவிடும் கருவிகளில் இசைக்கலையின் தத்துவம் பயன்படுகிறது.
இவ்வாறு பலவித ‘மீட்சியியல்’ பண்புள்ள பொருள்களின் அதிர்வு நமக்குப் பல வழிகளில் மிகவும் தேவையான ஒரு கூறாக உள்ளது. அதிர்வு என்பது எளிய சீரிசை இயக்கத்தைப் போல் அல்லாது பொதுவாக அதிக சிக்கல் நிறைந்ததாகும். ஆனால், தேவையான முன் வரையறைகளை ஏற்படுத்திக் கொள்வதின் மூலம் ஒரு குறிப்பிட்ட வகை அதிர்வாக அதை மாற்ற முடியும். திண் பொருள்களின் அதிர்வை எடுத்துக் கொள்வோம். அதன் ஒவ்வொரு சுரமும் (Note) பல மேற்சரங்களைக் கொண்டிருக்கும். அதே வேளையில் நெட்டதிர்வு (Longitudinal vibration), குறுக்கதிர்வு (Transverse vibration), முறுக்கதிர்வு (Torsional vibration) என்ற மூவகை அதிர்வுகளும் அதில் இருக்கும். ஒரு பொருளின் அதிரும் வகையினை அதன் இயற்பியல் நிலை கட்டுப்படுத்திய போதிலும், அப்பொருளை அதிர்வூட்டும் முறையே பெரும்பாலும்