பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மீரா

39


மேதையாக திகழ்ந்து வருகிறார். தமிழறிஞர்களின் எதிர் காலத் தமிழ்ப் பணி எவ்வகையாய் அமைய வேண்டும் என்பதற்கும் அவரே இன்று ஏற்ற முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறார்.

'அறிவியல் தமிழ்' பற்றி இன்று பலரும் பேசுகிறார்கள்; எழுதுகிறவர்கள் பலர் உண்டு. ஆனால் அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கான திட்டவட்டமான வழிமுறைகளை வகுத்துக் கூறி முன்மாதிரிப் பணியாற்றியவர்கள், ஆற்றி வருபவர்கள் விரல்விட்டு எண்ணத்தக்க அளவில்கூட இருப்பதாகத் தெரியவில்லை.

இவர் அறிவியல் தமிழ் வளர்ச்சிக்காக எழுதிய "காலம் தேடும் தமிழ் நூல் அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கான இலக்கிய, இலக்கண நூலாகவே அமைந்துள்ளதெனலாம். இவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் தமிழ்க் 'கூரியர்' இதழ் மூலம் அனைத்துத்துறை அறிவியல் செய்திகளையும் அதன் அண்மைக்கால மற்றும் புதிய கண்டுபிடிப்புகளையும் தெள்ளத் தெளிந்த நடையில், சொற் சொட்டோடும் பொருட் செறிவோடும் இலக்கிய நயத்தோடு எடுத்துக் கூறி விளக்குவதன் மூலம் தமிழ் ஆற்றல் மிக்க அறிவியல் மொழி அறிவியலைச் சொல்லுவதற்கென்றே உருவாகியுள்ள மொழி என்பதைச் செயல் பூர்வமாக உணர்த்தி வருபவர் மணவையார் அவர்கள்.

அறிவியல் தமிழ்த் தந்தை

கடந்த நாற்பதாண்டுகளாக அறிவியல் திறத்தை விளக்க வல்ல ஆற்றல்மிகு மொழி என்ற பெருமையை தமிழுக்களித்து, தமிழின் தோற்றத்தை மாற்றியமைத்து வரும் மணவையாரை "அறிவியல் தமிழ்த் தந்தை" என்றே எதிர் கால தமிழ் வரலாறு கூறும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.