பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

அறிவியல் திருவள்ளுவம்

பொறி என்றால்


மூன்றாவதாக,

"பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி
” (618)

என்னும் குறள் ஒரு வகையில் அறிவியலுக்கு அணியாகின்றது. பொறியின்மை என்பதற்கு 'விதி இல்லாமை' என்றே பரிமேலழகர் முதலிய பலர் உரைகண்டனர். 'நல்ல தலையெழுத்தில்லாமை பழியில்லை' என்னும் பொருள்பட விதியைக் காட்டினர். மணக்குடவர் 'ஆக்கம் இல்லாமை' என்றார். ஆனால், பரிதியார் மட்டும் "மெய், வாய், கண், மூக்குச் செவி குறைந்தது பங்கமல்ல’’ என்றார். பொறி என்பதற்கு 'ஐம்பொறி' என்பதே உரிய பொருளாகும்.

திருவள்ளுவரும், "பொறிவாயில் ஐந்து’’ என்று ஐம்பொறிக்கே 'பொறி' என்னும் சொல்லைப் பெய்தார். மேலும் "கோள்இல் பொறிஇல் குணம்இலவே என்குணத்தான்" என்று ஐம்பொறியைக் குறித்தார். இவ்வைந்து பொறியும் தலையிலேயே அமைந்துள்ள குறிப்பையும் காண்கின்றோம். கண், வாய், செவி, மூக்கு நான்கொரு மெய்யின் ஒரு பகுதியும் தலையில் உள்ளமை அறிவோம்.

இவ்வகை ஐந்து பொறியில்லாமை பழிதான். பார்வையில்லாத கண்ணைக் கொண்டவன் குருடன் என்னும் பழிக்கு ஆளாவான். இதுபோன்றே கேட்கமுடியாத செவிடன், பேசமுடியாத ஊமையன்-நெறியாக மூச்சுவிட முடியாது. மணத்தைமோந்து பார்க்க முடியாத மூக்கரையன், உணர்வை உணரமுடியாது மரத்துப் போனவன் பழிக்கு ஆளாவான்.