பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


பொருந்தும் என்பர்.32 இவருடைய இயற்பெயர், காசியபர் என்பது.

இவர் உருவாக்கிய வைசேடிகத் தத்துவத்திற்கு ஒளலூக .33 என்ற பெயரும் உண்டு. ஒளலூகம் என்ற சொல் உலூகம் (= கூகை. 0wl) என்ற சொல்லின் அடியாய்ப் பிறந்தது. பகற்பொழுது முழுதும் தியானத்தில் பழகி, இரவில்மட்டிலும் உணவு கொள்ளுதலின், இரவில் மட்டிலுமே விழித்திருக்கும் கூகை போன்றவர் என்ற கருத்தில் இப்பெயர் ஏற்பட்டது. அக்காலத்து முனிவர் பலரின் நடைமுறையினைக் கணாதரிடம் காண முடிகின்றது.

பெயர்க்காரணம் : வைசேடிகம் என்ற பெயர்க்காரணத்தையும் காட்டுவேன். வைசேடிகர் காட்சிப் பொருள் உண்மை வாதிகள் (Realists). இவர்கள் கண்ட அறுவகைப் பொருள்களுள் (ஷட்பதார்த்தங்கள்) விசேடம் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. 'விசேடம்' என்ற சொல்லின் அடியாய்த் தோன்றியது வைசேடிகம். குறிப்பிட்ட ஒரு பொருள் ஏனைய பொருள்களினின்றும் வேறுபடுத்தற்குரிய விசேட இயல்புகள் அல்லது சிறப்புத்தன்மைகளை ஆராய்தலின், இத்தத்துவம் வைசேடிகம் எனப் பெயர் பெற்றதாய்க் கூறுவர். ஏனைய தத்துவங்களுக்கில்லாத தனிச்சிறப்பு இதற்கு உண்டு. பொருள்களின் விசேடத் தன்மைகள்தாம் அவற்றின் உண்மைகளைச் சாதிப்பன என்பது இத்தத்துவத்தின் கருத்தாகும்.

உலகப் பொருள்களின் ஆக்கத்திற்கு அணுக்களே மூலப் பொருள்கள். அவை ஒன்றுசேர்ந்து மூலப்பொருள்களாகின்றன. அவற்றை அழிக்கும்போது மீண்டும் அணுக்களாகிவிடுகின்றன. இந்த அணுக்கொள்கையைத் தீவிரமாய் நிலைநிறுத்தியது வைசேடிகத் தத்துவம். இத்தகைய நுண்பொருள்களை அணுக்கள் என்றும், பரமானுக்கள் என்றும் குறிப்பிடுகின்றது, இத்தத்துவம். அணுக்களை மேலும் பிரிக்க முடியாது என்பது இத்தத்துவம். இக்கொள்கையே இத்தத்துவத்தின் மிக முக்கியமானது.34


32. Rathakrishman, S.Dr. indiam Philosophy, Vol. II, P. 178 33. மாத்துவர் இப்பெயரினால்தான் இத்தத்துவத்தைச் சுட்டினர். 34. நம் நாட்டுச் சமணமும் இக்கொள்கையுடையது. பெளத்தத்தின் ஒரு பகுதியினர் இக்கொள்கையை ஏற்பர். மேலைநாட்டு டெமாகிரிட்டஸ், எபிகியூரஸ் போன்றவர்களும் இதனை ஏற்பர்.