பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


(1)அத்வைதம் : இது சங்கர வேதாந்தம் என்றும் வழங்கப் பெறும். ‘அத்வைதம்’ என்று சொல் இரண்டற்றது என்று பொருள்படும். சுகம், சிவன் என்று சொல்பவை வேறு. பரம் வேறு அல்ல உள்ளது ஒரே பொருள். அஃது அகண்ட சத், சித், ஆனந்தம். தன்னைச் சகமாகவும் சீவனாகவம் காட்டிக் கொள்ளுகின்ற வல்லமை அதனிடத்து உள்ளது. அந்த வல்லமைக்கு மாயா சக்தி என்று பெயர். பிரம்மமும் பிரம்மத்தினுடைய சக்தியும் இரண்டல்ல. சீவனிடத்துள்ள அஞ்ஞானத்தால் (அறிவின்மையால்) சகம் என்றும் சீவன் என்றும் பேதம் அவனுக்குத் தோன்றுகின்றது. பிரம்ம ஞாலத்தில் பிரம்மம் ஒன்றே யாண்டும் உள்ளது. ஆறு ஆழியில் கலப்பது போன்று. ஞானம் அடைந்த சீவன் பரத்தில் கலந்து விடுகின்றான். இஃது அத்வைதம் புகட்டும் முக்தி.

கேரளத்தில் காலடி என்ற ஊரில் தோன்றிய ஆதிசங்கரர், அவர் ஆசிரியர் கோவிந்தர். கோவித்தர், ஆசிரியர் கௌடபாதர் ஆகியோரின் எண்ணங்களில் உதித்தது இந்தத் தத்துவம். பிரம்ம சூத்திரத்திற்கு ஆதிசங்கரர் வரைந்த ‘சங்கர பாஷியம்’ (சங்கரப் பேருரை) உலகப்புகழ் பெற்றது. தாயுமானவர் பாடல்களில் உள்ள ‘பரமசிவ வணக்கப்’ பாடல்கள் அனைத்தும் அத்வைதக் கருத்துகள் கொண்டவை.

(2) விசிட்டாத்வைதம் : இஃது இராமாநுசருடைய வேதாந்தம் என்றும் பெயர் பெறும். இத்தத்துவத்தை இராமாநுசர் எங்கும் பரவச்செய்ததனால் இஃது இராமாநுசர் தரிசனம் என்ற பெயரும் பெற்றது. திருக்கோட்டியூர் நம்பி இதற்கு எம்பெருமானார் தரிசனம் என்றும் சிறப்புப் பெயரிட்டார் என்பது வரலாற்று உண்மை பொதிந்தது.

‘விசிட்டாத்வைதம்’ என்ற தொடர் மொழி விசிஷ்டய்ய + அத்வைதம் என விரியும். விசிஷ்டம் - விசேஷம். சித்து, அசித்து இவற்றை உடலாயுடைய விசேஷத்தை உடையது. அஃதாவது, உலகும் உயிரும் பிரம்மத்திற்கு விசேஷணங்கள்; இறைவன் விசேஷியம், இவை இரண்டும் சேர்ந்ததே விசிஷ்டம் என்பது. சித்து, அசித்து இவற்றின் சேர்க்கையால் விளங்கிடும் இரண்டற்ற ஒன்றானதே பிரம்மம். அத்வைதம் = அ + த்வைதம் என விரியும். இங்கு துவி + இரண்டு = துவைதம் என்றாகின்றது.