பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்



பதி, பரமசிவம் என நிற்குங்கால் அதன் சக்தி ‘பராசக்தி’ என வழங்கப்பெறும். இதன் ஒரு சிறுகூறு உலகத்தைத் தொழிற்பட முற்படும். அப்பொழுது அஃது ‘ஆதிசக்தி’ என வழங்கப்பெறும். ‘திரோதான சக்தி’ எனப்படுவதும் இதுவே. இதுவே திரோதானம் - மறைப்பது. இச்சக்தி உலகத்தைத் தொழிற்படுத்த நினைக்குங்கால் அஃது ‘இச்சாசக்தி’ எனப் பெயர் பெறுகின்றது. அதற்குரிய வழிகளை அறிதலால் ‘ஞானசக்தி’ என்ற திருநாமத்தையும் ஏற்கின்றது. அவ்வழியே தொழிற்படுத்தி நிற்றலால் ‘கிரியா சக்தி’ என்ற திருப்பெயரையும் கொள்கிறது. இவ்வைந்து சக்திகளும் ‘பஞ்ச சக்திகள்’ என வழங்கப்பெறும். இறைவனுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள தொடர்பு ஒன்றாகவும். வேறாகவும், உடனாகவும் இருப்பதாய்க் கூறப்பெறும்.

பசு - ஆன்மா. இது மூன்று வகைப்படும்; மூன்று நிலையில் இருக்கக்கூடியது. ஆணவ மலத்தோடு மட்டும் கலந்திருக்கும் நிலை ‘கேவலம்’ என்று வழங்கப்பெறும். கேவலம் - தனிமை. இந்நிலை இருள்நிலை. இந்த ஒருமலம் உடைய ஆன்மாக்கள் ‘விஞ்ஞானகலர்’ எனப் பெயர் பெறுவர். ஆணவத்தை அடுத்து நிற்பது கன்மம். ஆணவம், கன்மம் என்ற இருமலங்களையும் உடைய நிலை மருள்நிலை. இந்நிலை ஆன்மாக்கள் ‘பிரளயாகலர்’ என வழங்கப்பெறுவர். மூன்றாவது மலம் மாயை. ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களையும் உடைய நிலை ‘அருள் நிலை’ இந்த நிலை ஆன்மாக்கள் சகலர் எனப்பெயர் பெறுகின்றனர்.

ஆன்மா எப்போதும் தனித்திருப்பதில்லை. ஒன்று, ஆணவத்தோடு சார்ந்திருக்கும்; அல்லது இருமலம், மும்மலங்களோடு சார்ந்திருக்கும்; அல்லது இறைவனோடு சார்ந்திருக்கும். அஃதாவது, ஆன்மா அஃது அடையும் பொருளின் தன்மையாய் மாறிவிடும். இதனைச் சித்தாந்தம் ‘சார்ந்ததன் வண்ணமாதல்’ என்று பேசும். ‘நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும்’ (குறள் - 452 - சிற்றினஞ்சேராமை) என்று வள்ளுவரும் உவமையால் விளக்கிப்போந்தார். சைவசமயக் கருத்துகள் அனைத்தும் என் நூலில் விரிவாய் விளக்கப்பெற்றுள்ளன.[1]


  1. 38. சைவ சமய விளக்கு - சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம் (டி. டி. கே. சாலை, சென்னை -18)