பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம், தத்துவம்

105




ஆன்மா வீடுபேறு அடைவதற்குச் சைவத்தில் நான்கு வழிகள் உண்டு. முதலாவது, கிரியை எனப்படும் தாச மார்க்கம் அல்லது தொண்டுநெறி. நாவுக்கரசர் கடைப்பிடித்த நெறி இது. இரண்டாவது, சரியை எனப்படும் சற்புத்திர மார்க்கம் அல்லது மகன்மை நெறி. இது ஞானசம்பந்தர் பின்பற்றிய நெறி. மூன்றாவது, யோகம் எனப்படும் சகமார்க்கம் அல்லது தோழமை நெறி. சுந்தரமூர்த்தி இதற்கு எடுத்துக்காட்டாய் அமைகின்றார். நான்காவது சன்மார்க்கம் எனும் ஞானநெறி. இஃது ஈசுவரனைப்பற்றிய அறிவு சார்ந்த நெறி. மணிவாசகப்பெருமான் இதற்கு எடுத்துக்காட்டாகின்றார்.

பாசம் என்பது மூன்றாவது தத்துவம். இதில் ஆணவம், கன்மம், மாயை என்று மூன்று பொருள்கள் அடங்கியுள்ளன. இவை ‘மும்மலங்கள்’ என வழங்கப்பெறும். மனம் - அழுக்கு. ஆணவமும் கன்மமும் ஆன்மாவைப் பற்றுவன. கன்மம் - வினை. மாயையால்தான் உலகம் உண்டாகின்றது. மாயை கண்ணுக்குப் புலனாகாதது. சைவம் 36 தத்துவங்களைப்பற்றிப் பேசுகின்றது. மாயையிலிருந்து 24 தத்துவங்கள் தோன்றுகின்றன. பஞ்சபூதங்கள் இவற்றில் அடங்கும். 36 தத்துவங்களை 36 மூலப்பொருள்களாகவும் (Elements), அவற்றின் அணுக்களாகவும் (Atoms) கொள்வது அறிவியல் பார்வை. ஆகவே, மாயை என்பது அணுவிற்குள் உள்ள பகுதிகளைக் (Sub-tonic particles) கட்டுவதாய்க் கொள்ளலாம். இன்றைய அறிவியல் உண்மைகள், சமயங்களின் சில விளக்கங்களோடு முழுவதுமாய்ப் பொருந்துவதைக் காணமுடிகின்றது.

2 (ஆ) புறச்சமயத் தத்துவங்கள் : அருமறைகளைச் சாராமல் தனிப்பட்ட முறையில் நம் நாட்டில் வளர்ந்த தத்துவங்கள் ‘புறச்சமயத் தத்துவங்கள்’ என்று வழங்கப்பெறுகின்றன. வேதங்களைச் சாராத இத்தத்துவங்களை அவைதிகத் தத்துவங்கள் என்றும் வழங்கலாம். இவற்றுள் முக்கியமானவை, நான்கு: உலகாயதம், ஆசீவகம், சமணம், பௌத்தம் என்பனவாகும்.

(1) உலகாயதம் : ‘கண்டதே காட்சி; கொண்டதே கோலம்’ என்ற இத்தத்துவம் வேத விளக்கங்களை ஏற்றுக்கொள்ளாத ஒரு தத்துவம். இத்தத்துவவாதிகள் கண்ணாலும் மற்றப் புலன்களாலும் உணரக்கூடியவற்றை மட்டும் ஒப்புக்கொள்பவர்கள். அனுமானிக்கக்கூடிய பொருள்களிலும் ஆப்த வாக்கியங்களிலும் நம்பிக்கை கொள்ளாதவர்கள். கடவுள், ஆன்மா என்பவை