பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம், தத்துவம்

107




உலகிலுள்ள அடிப்படைப் பொருள்கள் 92 ஆனாலும் வழக்கில் வருபவை பன்னிரண்டுக்குமேல் இல்லை. ஆகையால் இந்தக் கணக்கை உற்று நோக்கல் வேண்டும். உலகில் 1000 பாகத்தில் ஏறக்குறைய பாதி ஆக்சினென் என்ற உயிரியம் 492/1000 பங்கு. இந்த உயிரியம் காற்றில் ஐந்தில் ஒரு பங்கு. நீரில் ஒன்பதில் எட்டுப் பங்கு, இது கல்லிலும் உண்டு. சிலிகன் (Silicen) என்பது 257/1000 பங்கு, இது தரையில் கால் பங்கு. மணல் என நாம் வழங்குவது சிலிகனோடு உயிரியம் சேர்ந்த கலவையாகும். உலகில் அலுமினியம் 74/1000 பங்கு. இது மண்ணில் உண்டு. உலகில் இரும்பு 47/1000 பங்கு உயிரியத்தோடு கலந்தே கலவையாய்க் கிடக்கின்றது. கால்சியம் என்ற சுண்ணாம்புச்சத்து உலகில் 34/1000 பங்கு. சோடியம் என்பது உலகில் 26/1000 பங்கு. இது சோற்றுப்பிலும் உள்ளது. பொட்டாசியம் என்ற உப்பு அபிரேகம் முதலியவற்றிலும் உண்டு. இது உலகில் 24/1000 பங்கு. மக்னீஷியம் என்பதனை பெட்ரோமாக்ஸ் விளக்கின் திரியாய் எரிவதற்கு வெள்ளைச் சல்லடை உறையாகப் போட்டிருக்கக் காணலாம். இது கடல் நீரிலும் உண்டு. இஃது உலகில் 19/1000 பங்கு. ஹைட்ரஜன் நீரிய ஆவி நீரில் உள்ளது என அதன் பெயரே கோள் சொல்கிறது. (Hydrogen = hydro - water;gen - generated) இஃது உலகில் 9/1000 பங்கு. இது மண்ணிலும் மணலிலும் உண்டு. குளோரின் என்பது 2/1000 பங்கு. இது சோற்றுப்பில் நாம் மேலே கூறிய சோடியத்தோடு கலவையாய்க் கிடக்கின்றது. பாஸ்வரம் என்பது எரிகந்தகம். இது 1/1000 பங்கு. இஃது எருவுக்கு இன்றியமையாதது. இஃது நாம் உண்ணும் வெண்டைக் காயில் உண்டு. மூளைக்கு நல்லது என்று சொல்லுவார்கள். இந்த 12 பொருள்களே உலகில் 991/1000 பங்கானால் மிகுதி நிற்கும் 80 அடிப்பொருள்களும் 9/1000 பங்கு அளவே இருக்கக் காண்கின்றோம். பொன், வெள்ளி, ஈயம் என்றெல்லாம் பேசுகின்ற நாம், உலகில் பரந்து கிடக்கும் பொருள்களை விட்டு எங்கெங்கெல்லாமோ ஓடி அலைகின்றோம். ஆதலின், இதில் வாராத பொருள்களைப்பற்றியும் அறிய வேண்டும். ஆனால் அது முழு அறிவியலுக்கு இட்டுச் சென்றுவிடுமாதலால் அதனை இத்துடன் நிறுத்துவோம். இதனை வைணவம் அசித்து என்று வழங்கும்; சைவ சித்தாந்தம் பாசம் என்று குறிப்பிடும். பாதம் அல்வாவைச் சுவைக்கின்றோம். இஃது அசித்துதான். ஆண்டவன் படைப்பில் அசித்தும் எவ்வளவு சுவையாகப் பயன்படுகின்றது, பாருங்கள். சித்தாந்தம் பாசம் என்கின்றது. உண்மைதானே!

(2) ஆசீவகம் : அழிந்தொழிந்துபோன இந்தச் சமயம் இப்போது முழுவதும் மறக்கப்பட்டுவிட்டது. இது வட-