பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம், தத்துவம்

121


(10) வாக்குகுப்தி (= சொல்லினால் தீமை புரியாமை) (11) மனோகுப்தி (= மனத்தினால் தீமை புரியாமை; என்று மூவகை நெறிகளையும் பேணுதல், (12) வேதனைகளை உயிர்க்கிறிதி வரினும் சகித்துக்கொள்ளுதல் ஆகியவை துறவியரின் நல்லிணக்கமாகும். [1]இவற்றுடன் 14 குணத்தானங்கள். 13 சூள். 11 பிரதிமாக்கள் முதலியவற்றையும் அநுசரித்தல் வேண்டும்.

சமண மந்திரம் : சைவர்கள் ஐந்தெழுத்தினை மந்திரமாய் ஓதுதல் போல, திகம்பரர் ‘பஞ்சநமஸ்காரம்’ என்னும் மந்திரத்தை ஓதுவர். திருத்தக்கதேவர் இந்த மந்திரத்தினை ‘ஐம்பதம்’ என்று குறித்தனர் (சிந்தா. 951). மதுரைப்பயணம் மேற்கொள்ளும் கவுந்தியடிகள் “மொழித்துணைத் தெய்வம் வழித்துணையாக”ப் புறப்பட்டதாய்ச் சிலம்பு பேசும். கவுந்தியடிகள் ஓதியது பஞ்சமந்திரம் என்பதும். அஃது அ. சி. ஆ. உ. சா என்ற ஐந்தெழுத்தாலானது என்பதும் சிலம்பின் உரையால் தெளியலாம். இந்த எழுத்துகள் முறையே அருகர், சித்தர், ஆசாரியர், உவாத்தியாயர். சாதுக்கள் என்ற ஐவகைப் பெரியார்களை (பரமேட்டிகளை) [2] - குறிக்கும். இவர்களை வணங்குதல்தான் இம்மந்திரத்தின் உட்கிடையாதல் தெளிவாகும். திகம்பர நெறியினைக் கடைப்பிடிக்கும் துறவிக்குக் குரு முதன்முதலாய் இந்த பஞ்சநமஸ்கார மந்திரத்தை ஓதுவிப்பார் என்று சமண நூல்களால் அறிகின்றோம். காலைக் கதிரவன் கீழ்த்திசையில் எழுங்கால்

திகம்பரத்துறவி பஞ்சநமஸ்காரம் கட்டும் பரமேட்டிகள் ஐவைரையும் வழிபடுதல் கடமையாகும்.[3] சீவகன் இம்மந்திரத்தினை ஓதியே நாயினைத் தேவனாய் உருக்கொளச் செய்தான் (சிந்தா. 951). அரவு தீண்டி உயிர் துறந்த பதுமையினையும் சீவகன் இம்மந்திரத்தால்தான் உயிர்பெறச் செய்தான் (சிந்தா.1289). ஆதலின், சமணர்கள் உயிரினும் மேலாய் மதிக்கும் இம்மந்திரப் பொருளாய் விளங்கும் பரமேட்டிகள் ஐவர்க்கும் வடிவம் அமைத்து வழிபாடு புரிந்தனர் என்பது வரலாறு.


  1. 43. Misra Umesha, Dr : History of Indian Philosophy.
  2. 44. Deo. S.B. : History of Jaina Monachism (From inscriptions & literature)
  3. 45. பரமேட்டிகள் - பக்குவம் பெற்ற பவ்விய சீவன்கள் ஆன்மிக முதிர்ச்சியின் அடிப்படையில் ஐந்து வகையாகப் பாகுபாடு செய்யப்பெறுவர். அனைவராலும் வணக்கத்தக்க இவர்களைப் பரவுதல் சமணர் மரபாகும்.