பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


என்று விளக்குவர். எங்கும் சிவனுடைய திருமேனி உள்ளது. பார்க்குமிடந்தோறும் அவனுடைய அருளாற்றல் நீக்கமற நிறைந்துள்ளது. அவன் திருவருளால் நடைபெறும் படைத்தல், காத்தல், துடைத்தல், மறைத்தல், அருளல் என்ற திருத்தொழில்கள் ஐந்தும் ஆருயிர்களின் நன்மையின் பொருட்டேயாகும். இவையனைத்தும் சிவசக்தியின் வாயிலாகவே அவன் செய்தருள்கின்றான். அம்மையும் அப்பனும் நுண்ணறிவு அம்பலமாம் திருச்சிற்றம்பலத்தின்கண் விளங்கியருள்கின்றனர். அதனால் எல்லாம் சிதம்பரமாகின்றது. அப்பன் செய்தருளும் திருக்கூத்தும் எங்கும் நிறைந்து காணப்பெறுகின்றது. அம்மையின் ஆற்றல் ஒவ்வொரு செயலிலும் தென்படுகின்றது. எல்லா உயிர்களும் உலகங்களும். எல்லா உலகியற்பொருள்களும் அவனைச் சார்ந்து நிற்கின்றன. எல்லாச் செயல்களும் அவனைச் சார்ந்துள்ளன. சுருங்கக் கூறின், உலகமெல்லாம் சிவசக்தியின் திருக்கூத்தாகும். இதனால் திருமூலரும் ‘அம்பல மாவது அகில சராசரம்’ [1] என்றனர். இதனையே சிவஞான சித்தியாரும்,

“உலகமே உருவ மாக யோனிகள் உறுப்ப தாக
இலகுபேர் இச்ச ஞானக் கிரியையுட் கரண மாக
அலகிலா உயிர்ப்பு லன்கட்கு அறிவினை ஆக்கி ஐந்து
தலமிகு தொழில்க ளோடும் நாடகம் நடிக்கும் நாதன்.” [2]

என்று விளக்கியுரைக்கின்றது. ஆருயிர்கள் எல்லாமும் பேரின்பம் எய்தும்பொருட்டே இறைவன் இந்த ஐந்தொழில்களையும் புரிந்து வருகின்றான்.

இவ்வாறு அறிவியல் அடிப்படையில் ஆற்றலைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது ‘சக்தி தத்துவம்’ (ஆற்றல் தத்துவம்) நினைவிற்கு வருகின்றது. அதனைப்பற்றியும் சிறிது சிந்திப்போம்.

(10) சக்தி தத்துவம் : இது சைவத்திலும் உண்டு, வைணவத்திலும் உண்டு. சைவ சமயத்தினர் இறைவனை ‘அம்மையப்பன்’ என்று கருதுவது போலவே, வைணவ சமயத்தினர் இறைவனை ‘இலக்குமி - நாராயணன்’, ‘சீநிவாசன்’, ‘திருவாழ் மார்பன்’ என்றெல்லாம் கருதுகின்றனர். இருகடவுளர்களின்


  1. 61. திருமத்திரம் - திருக்கூத்துத் தரிசனம் - 54 (2775)
  2. 62. சிவஞான சித்தியார்- சுபக்கம் - 257