பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்



இருவரும் காண்கின்றனர். இதுதான் புரட்சிக்கவிஞர் படைத்துக்காட்டிய கற்பனைக்கதையின் சுருக்கம். ஒரு மூலிகையால் அமெரிக்கன் முதலியோர் பேசுவதைக் கேட்பது வானொலியைக் குறிப்பிடுகின்றது என்றும், மற்றொரு மூலிகை இராமாயணக் காலட்சேபத்தை நேரில் காண்பது தொலைக்காட்சியைக் குறிப்பிடுகின்றது என்றும் கருதலாம் அல்லவா?

முடிவுரை : அன்பர்களே, இன்றைய சொற்பொழிவில் அறக்கட்டளை நிறுவிய பேராசிரியர் டாக்டர் எஸ். சங்கரராஜூ நாயுடு அவர்களைப் பற்றியும், அவர் அருமைத் தந்தையார் நிமிஷகவி சுப்பைய நாயுடு அவர்களைப்பற்றியும் சில குறிப்புகள் தந்தேன்.

பண்டைய தமிழர்களிடம் அறிவியலறிவு நிறைந்திருந்தது என்பதற்கும், அதனை அவர்கள் நன்கு வளர்த்தனர் என்பதற்கும் தனி நூல்களின் சான்றுகள் இல்லாது போயினும், அவர்களின் அறிவியற்கலைகள் பயன்முறைக் கலைகளாய் இருந்தன என்பதற்குச் சில இலக்கியச் சான்றுகளை உங்கள் திருவுள்ளத்திற்கு எடுத்துக் காட்டினேன்.

பண்டையோர் வானநூல் துறையில் அறிவுமிக்கு விளங்கினர் என்பதைப் புறநானூறு, பெரும்பாணாற்றுப்படை, சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பா மாலை போன்ற நூல்களில் சான்றுகள் கிடைக்கின்றன என்பதை நிலைநாட்டினேன். இராசி மண்டலம் இன்னது என்பதைத் தெளிவாக்கினேன். கலிலியோ கருத்தைப் காப்பர்னிகஸ் மறுத்து உண்மை நிலையை நிறுவினார் என்பதைப் புலப்படுத்தினேன். காலதத்துவத்தை வள்ளுவர் குறள் மூலம் தெளிவாக்கினேன். அகிலம் இன்னதென்பதை மணிவாசகப்பெருமானின் கருத்தை அடிப்படையாய்க்கொண்டு விளக்கினேன். திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், தாயுமான அடிகள் இவர்களின் வாக்குகளைக்கொண்டு பரம்பொருள் இன்னதென்பதைச் சுட்டி உரைத்தேன். அண்டங்கள் ‘நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன’ என்ற மணிவாசகர் கருத்துக்குப் பாரதியாரின் பாடல் விளக்கமாய் அமைந்திருப்பதைப் புலப்படுத்தினேன். இந்த அற்புதக் கருத்தைத் திரிகூடராசப்பக் கவிராயரின் பாடல் நுட்பமாய் விளக்கி நிற்பதைத் தெளிவாக்கினேன். அறிவுலக மேதை ஐன்ஸ்டைனின் கருத்தையும்