இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
62
168. துணைப் பரிவு நரம்புமண்டலம் என்றால் என்ன?
- இது தானியங்கு நரம்புமண்டலத்தின் ஒரு பகுதி. உள்ளுறுப்பு வேலைகளைக் கட்டுப்படுத்துவது.
169. புறஞ்செல் நரம்புமண்டலம் என்றால் என்ன?
- நரம்பும் நரம்பு முடிச்சுகளும் சேர்ந்த தொகுதி. மைய நரம்பு மண்டலத்திலிருந்து உறுப்புகளுக்கும் உடலின் புறப்பகுதிகளுக்குச் செல்வது.
170. மூளை எங்கு அமைந்துள்ளது?
- மண்டை ஓட்டில் பாதுகாப்பாக அமைந்துள்ளது.
171. மூளையின் பகுதிகள் யாவை?
- பெருமூளை, இடைப்படுமூளை, சிறுமூளை, முகுளம், தண்டுவடம், நரம்புகள் ஆகியவற்றைக் கொண்டது. உடற்செயல்களைக் கட்டுப்படுத்துவது, ஒருமுகப்படுத்துவது.
172. மூளைச்சாக்காடு என்றால் என்ன?
- மூளையின் உயிர்ப்பான செயல்கள் நிலையாக ஒடுங்கும். இந்நிலையிலேயே உறுப்பு மாற்றத்திற்குரிய உறுப்புகள் நீக்கப்படும்.
173. நடு மூளை என்றால் என்ன?
- மூளையின் ஒரு பிரிவு. முன் மூளையையும் பின் மூளையையும் இணைப்பது.
174. சிறுமூளை என்றால் என்ன?
- பின்மூளையின் பெரும் பகுதி. இயக்குத்தசைக்கிடையே ஒத்துழைப்பை உண்டாக்கி நடத்தல், ஓடுதல் முதலிய இயக்கு வேலைகள் நடைபெற மூளைக்கு உதவுவது. உடலின் நேர்த்தோற்றத்திற்கு காரணம் இதுவே.
175. கள்ளுண்டவன் தள்ளாடுவதேன்?
- சிறு மூளை பாதிக்கப்படுவதால், அதன் கட்டுப்பாட்டிலுள்ள தசைகளில் ஒருமித்த இயக்கம் குலைகிறது.
176. பெருமூளைப் புறணி என்றால் என்ன?
- பெருமூளைப் பகுதி. விருப்பத்திற்குட்பட்ட இயக்கங்களையும், பார்வை, கேட்டல், தொடுதல் முதலிய உறுத்துணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துவது.