பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கி.ஆ. பெ. விசுவநாதம்
17
 

கெட்ட சட்டத்தை நல்ல அதிகாரிகள் நடத்துவதைவிட நல்ல சட்டத்தைக் கெட்ட அதிகாரிகள் நடத்துவதில்தான் அதிக ஆபத்து இருக்கிறது.

இரவல் வாங்காதே

எதை இரவல் வாங்கினாலும், சைக்கிளையும் குடையையும் மட்டும் இரவல் வாங்காதே. ஏனெனில் அவற்றைக் கொண்டுபோய்க் கும்பலில் வைத்து விட்டுப் பின் அடையாளம் தெரியாமல் விழிக்க நேரிடும்.


ஒன்றும் தெரியாது

‘எனக்கு எல்லாம் தெரியும்’ என்று கூறுகிறவன் தனக்கு ஒன்றும் தெரியாது என்பதைக் காட்டிக்கொள்ளுகிறான்.

‘எனக்கு ஒன்றும் தெரியாது’ என்ற கூறுகிறவன் எதையோ தெரிந்து கொண்டுதான் கூறுகிறான்.


இளமையில் அழகு

நீங்கள் தேள் குஞ்சு, பூனைக்குட்டி, பன்றிக்குட்டி, யானைக்குட்டி, எலிக்குஞ்சு பாம்புக்குட்டி என்பவைகளைக் கண்டால், எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறீர்கள்! அவை முதுமையடைந்து விட்டால் ஏன் வெறுக்கிறீர்கள்! இளமையில் ஒர் அழகு உண்டு!


வியப்பு

பாதையில் செல்லுபவர்கள் மோட்டார் ஒட்டிகளைத் திட்டுவதும் மோட்டார் ஒட்டிகள் நடந்து செல்லுபவர்களைத் திட்டுவதும் வியப்பில்லை.

ஒரே ஆள், நடந்து செல்லும் போது மோட்டார் ஒட்டிகளைத் திட்டுவதும், மோட்டாரில் போகும்போது நடந்து செல்லுபவர்களைத் திட்டுவதும் தான் வியப்பு.


உண்மை

ஒயாது பேசிக்கொண்டிருப்பவன் உள்ளத்தில் ஒன்றும் தங்காது! ஒன்றுமே பேசாதிருப்பவன் உள்ளத்தில் உண்மை தங்காது!