பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.ஆ. பெ. விசுவநாதம்

23


உள்ளத்தில் தெள்ளியராதல்
ஊக்கத்தில தளராதிருத்தல்
எவரையும் தமராய்க் கொள்ளல்
ஏற்றத் தாழ்வின்றி வாழ்தல்
ஐயந்திரிபறப் பேசுதல்
ஒழுக்கத்தைக் காத்தல்
ஒரஞ்சாராது நிற்றல்
ஒளவியந்தன்னை அகற்றல்
செவ்விய தமிழரின் பண்பு.

நாட்டிற்கு ஆபத்து

ஒரு நாட்டிலுள்ள மக்களுள் சிலர் மூடராயிருப்பதால் ஒன்றும் துன்பம் வந்துவிடுவதில்லை. அவர்கள் தங்களை அறிஞர்கள் எனக் கருதிக்கொண்டு செயலாற்றத் தொடங்கும் பொழுதுதான் துன்பமும் விளையத் தொடங்குகின்றன.

ஒரு நாட்டிலுள்ள மக்களுள் சிலர் அறிஞராய் இருப்பதால் ஒரு பயனும் உண்டாவதில்லை. ஆனால் அவர்கள் “நம்மால் எதுவும் செய்ய இயலாது.” என்று நினைக்கும்பொழுதுதான், அந்நாட்டிற்கு ஆபத்து விளையத் தொடங்குகிறது.


பெருந்தன்மை

பொறாமையிலிருந்து அற்பத்தனம் தோன்றுகிறது. சகிப்புத் தன்மையிலிருந்து பெருந்தன்மை தோன்றுகிறது.


அமைதி

ஒரு செயல் படாடோபத்திலிருந்து விளைகிறது. பெருஞ் செயல் அமைதியிலிருந்து விளைகிறது.


உயர்ந்த கருத்து

சிறந்த ஓர் ஒழுக்கத்தை ஒரு வரலாற்றிக் கண்டால், அது அந்த நாட்டின் பண்பு எனக் கொள். அதையே கற்பனையில், கட்டுரையில் சொற்பொழிவிற் கண்டால், அந்த நாட்டில் இல்லை எனக் கருது.