பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
26
அறிவுக்கு உணவு
 

தேவை

உன் தேவையைக் குறைத்துக் கொள். இயலாவிட்டால் சரிசெய்து கொள். தேவையில்லாததைத் தேடித் திரியாதே.


அபாயம்

அபாயம் வரும் என்று அஞ்சிச் சிலர் உபாயம் தேடுவது உண்டு. உபாயம் தேடும் வழியிலேயே அபாயம் வருவதும் உண்டு.


ஏமாற்றம்

பிறரை ஏமாற்றுகிற ஒவ்வொருவனும் தன்னை நல்ல வழியி லிருந்தே மாற்றிக்கொள்ளுகிறான்; பிறகு மாற்றிக்கொண்டதிலிருந்து மாறமுடியாமல், தானே ஏமாற்றமடைகிறான்.


கேள்வி

கேள்வி வேறு, ஐயப்பாடு வேறு. முன்னது தெரிந்து கொண்டு கேட்பது; பின்னது தெரிந்து கொள்ளக் கேட்டது.


அடைசல்

நீ, மலிவாயிருக்கிறது என்பதற்காக எதையும் வாங்கி வீட்டில் அடைக்காதே. இதனால் வீட்டில் அடைசல், ஏற்படும் என்பது கருத்தன்று. அதற்கு முன்னே உன் மூளையிலும் ஒரு அடைசல்' ஏற்பட்டுவிடும்.


பொது வாழ்வு

நீ குறித்த காலத்தில் செய்யப் பழகு; அல்லது செய்யும் காலத்தையாவது குறிக்கப் பழகு; இரண்டும் முடியாவிட்டால் பொதுவாழ்விலிருந்து விலகு.


எச்சரிக்கை!

எச்சரிக்கையாய் இருப்பவர்களும் வாழ்வில் ஏமாற்றத்தைக் காண்கிறார்கள்! எச்சரிக்கையற்று இருப்பவர்கள் வாழ்வில் என்னென்ன காண்பார்கள்?