பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.ஆ. பெ. விசுவநாதம்

9



கே: அழிப்பவன் ஆண் ஆக்குபவள் பெண், என்பது எந்த அளவு உண்மை?

வி: எல்லாவற்றிலும் அழிப்பவன் ஆண் அல்லன், எல்லாவற்றிலும் ஆக்குபவள் பெண்ணும் அல்லள். ஒரு குடும்பத்தைச் சிறப்பாக நடத்துவதில் ஆணைவிடப் பெண் சிறந்தவள்.

கே: வாய்ப்புள்ளவன் வாழ்கிறான் வாய்பில்லாதவன் வதைபடுகிறான். இந்நிலை மாறுவது எப்போது?

வி: நல்லவன் தீமையை அனுபவித்தாலும், தீயவன் நல்லதை அனுபவித்தாலும், அவை நெடுங்காலம் நில்லா. எவனும் வாய்ப்பின்றி வாழ இயலாது; அவ்வாய்ப்பை முயற்சியின்றிப் பெற இயலாது.

கே: எண்ணம் பிறக்குமிடம் எது? மனம் வேறு. மனச்சாட்சி வேறா?

வி: எண்ணுவதே மனந்தான். அதை நல்லது கெட்டது என அறிவுறுத்துவது எதுவோ, அது அறிவு: தீமை நன்மை என அறிவுறுத்துவது அறிவு. அதைமீறிச் செல்வது மனம். அறிவு சாட்சியாக நிற்பதற்கு மனச்சாட்சி என்பது பெயர்.

கே: தங்கள் கொள்கையும் திட்டமும் நாட்டில் வெற்றி பெறா என்பது தெரிந்திருந்தும், தலைவர் சிலர் விடாப் பிடியாகக் கட்சியை நடத்திக் கொண்டிருப்பதன் காரணமென்ன?

வி: அவர்கள் கொண்டுள்ள கொள்கை நேர்மையானதாயிருந்தால், அதற்கு ஊக்கம் என்பது பெயர்; நேர்மையற்று இருந்தால் தன்னலம் என்பது பெயர்.

கே: கோபமுள்ள மனைவியைச் சமாதானப்படுத்துவது எப்படி?

வி: அடக்கிப் பார்ப்பது அல்லது அடங்கிப் போவது.

கே: தாலிக் கயிற்றின் தத்துவமென்ன?

வி: பழங்காலத் தமிழன் தன் விரத்திற்கு அறிகுறியாகப் புலிப் பல்லைக் கொண்டுவந்து தன் அன்புக் குரியவளிடம் கொடுத்து, கழுத்தில் அணியச் செய்து மகிழ்ந்து வந்தான், பின்னர் பொன் தாலியாயிற்று. புலிப்பல் தாலி என்று சொல்வது இதனை மெய்ப்பிக்கும். பிற தாலிகளுக்கு என்ன சொல்வது என்பது விளங்கவில்லை.