உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

அடுக்கல் — மலை. அடுக்கற் பொரும் ஏறு — மலையொடு பொருது நிற்கும் இயல்புடைய மதயானை, இனி மலை முழையில் வாழும் சிங்க ஏறு எனப்பொருள்கோடலும் பொருந்தும். இடித்தல் — கனைத்து உரப்புதல்.

உரையினால் இம்மாலை யந்தாதி வெண்பாக்
கரைவினாற் காரைக்காற் பேய்சொற் — பரவுவார்
ஆராத வன்பினோ டண்ணலைச் சென்றேத்துவார்
பேராத காதல் பிறந்து. (101)

இ-ள்: நெஞ்சக் கனிவினால் காரைக்காற்பேயார் பாடிய இவ்வெண்பா அந்தாதியாகிய சொன்மாலையினால் சிவபெருமானாகிய இறைவனை ஆராத பேரன்புடன் போற்றிப் பரவும் அடியார்கள் என்றும் நிலை பெயராத பெருங் காதல் தோன்றிப் பெருக அவ்விறைவனை யடைந்து ஏத்தி மகிழும் பேரின்பத்தில் திளைத்தின்புறுவர்-எ-று.

வெண்பா அந்தாதி மாலையாகிய இவ்வுரையினால் பரவுவார், பேராத காதல் பிறந்து அண்ணலைச் சென்று ஏத்துவார் என முடிக்க. பேராத காதல்- இறவாத இன்ப அன்பு.

திருச்சிற்றம்பலம்