உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

ஆன்மாக்கள் முழுநலம் பெறுதற்குரிய திருவருளாகிய இறைமைக் குணமுடைய சிவபெருமான். அவனது நீள் முடிமேல் விரிசடை, விசும்பு ஆம் என முடிக்க.

விசும்பில் விதியுடைய விண்ணோர் பணிந்து
பசும்பொன் மணிமகுடந் தேய்ப்ப—முசிந்தெங்கும்
எந்தாய் தழும்பேறி யேபாவம் பாவம் பொல்லாவாம்
அந்தா மரைபோ லடி. (76)

இ-ள் : எந்தையே, அழகிய தாமரை மலர் போலும் நின் திருவடிகள், வாழும் வானுலகில் நற்பேறுடைய தேவர்கள் தலை தாழ்த்து வணங்க (அன்னோர் அணிந்துள்ள) பசிய பொன்னாலாகிய மணி பதிக்கப்பெற்ற முடிகள் தேய்ந்து உராய்தலால் எங்கும் தழும்பேறி, அந்தோ (அடியார்களாகிய எங்களால் காணுதற்கு) இன்னாத தோற்றமுடையவாயின எ-று.

விதி - நல்வினைப்பேறு. பணிந்து பணிய எனத் திரிக்க. தேய்ப்ப-தேய்த்தலால்; காரணப்பொருட்டாய வினையெச்சம். ஏபாவம்-அந்தோ தீவினையே யென வருந்தும் இரக்கக் குறிப்பு. பொல்லாவாம்- (தோற்றத்தால்) இன்னாதனவாயின. ‘நின்போலமரர் நீண்முடி சாய்த்து நிமிர்ந்துகுத்த, பைம்போ துழக்கிப் பவளந் தழைப்பன’ (திருநாவுக்கரசர்) என வரும் தொடர் இங்கு ஒப்பு நோக்கத் தகுவதாகும். இதனால் இறைவன் திருவடிகளின் மென்மையும் தன்னையடைந்தாரைத் தாங்கும் நோன்மையும் ஒருங் குணர்த்தப்பட்டமை காண்க.