பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

பேசாமல், நாவடக்கத்தைக் கடைப்பிடிக்கும்படி பழக்கப்படுத்தப் பெற்றிருந்தனர்.

ஏதன்ஸைத் தலைநகராகக் கொண்ட அதீனிய அரசில் மக்கள் நாகரிகத்திலும், ஆடம்பர வாழ்க்கையிலும் அதிக விருப்பமுள்ளவர்கள். அவர்கள் வாழ்க்கையின் இன்பங்களை நுகர்வதில் ஆர்வமுள்ளவர்கள். நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே அவர்கள், அரசனே தேவையில்லை என்று முடிவு செய்து, குடியரசு அமைத்துக்கொண்டிருந்தார்கள். எந்தச் செய்தியையும் கூடிப்பேசியே அவர்கள் முடிவு செய்வார்கள். இதனால் பேச்சில் வல்லவர்களுக்கு அங்கே அரசியலிலும் சமூகத்திலும் முதன்மையான இடம் கிடைத்தது. சில சமயங்களில் வெறும் கிளர்ச்சிக்காரர்களின் பேச்சைக் கேட்டு, அதீனியர்கள் தங்களுக்கு மிகுந்த தொண்டு புரிந்த பெருந்தலைவர்களையும் தளபதிகளையும் இழக்க நேர்ந்தது. எனினும் அதீனியர் அனைவருமே போர் வீரர்களாக விளங்கினார்கள்.

ஸ்பார்ட்டாவுக்கும் ஏதன்ஸுக்கும் அடிக்கடி போர்கள் நடப்பதுண்டு. இவை தவிர, நாட்டிலிருந்த மற்ற நகரங்களும், ஒவ்வொன்றும் தனி அரசாகக் கருதிக் கொண்டிருந்ததால், யவனர் அனைவரும் ஒரே இனம் என்ற உணர்ச்சியும், அந்நியர் படையெடுத்து வருகையில் யாவரும் ஒன்றி நின்று எதிர்க்கவேண்டு மென்ற எண்ணமும் வேரூன்றி யிருக்கவில்லை.

அந்த நிலையில் ஆசியாவில் பேரரசாக விளங்கிய பாரசீகமும் யவனநாடும் பெரும் போர்கள்