பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

கொண்டிருந்த கலிங்க மக்களுக்கு அத்துணை அவதிகள் ஏற்படக் காரணம் என்ன? போர்தான் காரணம். அதனை உணர்ந்து கொண்டதும், அசோகர் மேற்கொண்டு போர் செய்வதே இல்லை என்று உறுதி செய்துகொண்டார். பக்கத்து நாடுகளை வென்றுவென்று தமது பேரரசை வலிமைப்படுத்தவேண்டும் என்று கருதி வந்த பேரரசராகிய அசோக மோரியர் மறைந்து, அருள் மிகுந்த அசோகர் என்ற மனிதர் தோன்றிவிட்டார். கலிங்கத்திலே புரிந்த கன்னிப் போரே தமது கடைசிப் போர் என்று அவர் மக்களுக்கும் வீரர்களுக்கும் அறிவித்தார். முதன்முதலில் உலகிலே ஆயுத ஒழிப்புப் பற்றி முடிவு செய்து, அதை நிறைவேற்றிய மன்னர் அவரே. வையகத்தை இரத்த ஆறுகளும், நிணங்களும், பிணங்களும் நிறைந்த மயானமாகச் செய்வதை விடுத்து, அதை அன்பும் அருளும் நிறைந்த பசுஞ் சோலையாகச் செய்யவேண்டும் என்று அவர் தீர்மானித்தார். அருளுடைய மன்னர்கள் எத்தனையோ பேர்களை உலகம் கண்டிருக்கிறது; ஆனால், இலட்சக் கணக்கான உயிர்களைப் பலிவாங்கி அரிதில் வெற்றி பெற்ற களத்திலேயே போரையும் வெற்றியையும் ஒருங்கே துறந்த பெரியவர் அசோகர் ஒருவரே. தாம் பெற்ற வெற்றி தரும வெற்றி அன்று; அசுர வெற்றி என்று கண்டதும், கொதிக்கின்ற சட்டியைத் தொட்டதும் கைகள் விட்டுவிடுவதுபோல, அவர் அதைத் துறந்து விட்டார்.

கலிங்கப் போரில் தமக்கு ஏற்பட்ட ஆறாத்துயரையும், மன வேதனையையும் அசோகர் பாறை-