பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73

ருக்கிறார். ' அந்தச் சாசனம் சோகம் நிறைந்த அவரது உணர்ச்சித் துடிப்புடன் விளங்குகின்றது. அது கால வெள்ளத்தைக் கடந்து ஒரு மனிதரது ஆன்மாவின் ஓலத்தை இன்னும் தாங்கி நிற்கின்றது' என்று ஆசிரியர் ஸ்மித் போற்றியுள்ளார்.

கலிங்க நாட்டில் தோசலி, சமாபா என்ற இரண்டு இடங்களில் அசோகர் இரண்டு பாறைக் கல்வெட்டுக்களுக்கு ஏற்பாடு செய்தார். அவற்றிலே தம் நிருவாக அதிகாரிகளாகிய மகாமாத்திரர்களும், நகரச் செய்திகளைக் கவனிக்கும் நீதிபதிகளும் கவனிக்க வேண்டிய இன்றியமையாத செய்திகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. அவர்களிடம் பல்லாயிரம் உயிர்கள் ஒப்படைக்கப் பெற்றிருந்ததை நினைவுறுத்தி அவர்கள் நல்ல மனிதர்களுடைய அன்பைப் பெறவேண்டும் என்றும், மக்களுக்கு இம்மைக்கும் மறுமைக்கும் வேண்டிய எல்லா வசதிகளும் கிடைக்கும்படி செய்யப்பட வேண்டும் என்றும் அசோகர் கூறியிருந்தார். அதிகாரிகள் பொறாமை, முயற்சியின்மை, கடுமை, பரபரப்பு, பழக்கமின்மை, சோம்பல், தளர்ச்சியின்றி நேர்மையான வழியில் உறுதியுடன், இடைவிடாமல், ஊக்கத்துடன் சென்று கொண்டிருக்க வேண்டியதன் தேவையை அவர் நன்கு வற்புறுத்தியிருந்தார். எல்லைப்புறங்களிலுள்ள மக்களுக்கு அவர் அறிவிக்க விரும்பிய செய்தி, 'அவர்கள் என்னிடம் பயம் கொள்ள வேண்டியதில்லை. என்னிடமிருந்து துன்பத்திற்குப் பதிலாக அவர்கள் இன்பத்தையே பெறுவார்கள் என்று நம்பும்படி செய்யவேண்டும்,' என்பதே ஆகும்.