பக்கம்:அலைகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126 O லா ச. ராமாமிருதம்


அங்கு அவர்கள் மூவர் தவிர யாருமில்லை.

அமைதி தன் வெண் சிறகுகளை விரித்துக் கொண்டு இறங்கி மெத்தென்று அணைப்பதை உணர்ந்தான். வலியின் தெரிவுகள் கலைந்து இதவு கண்டு கோமதியின் முகம் குழந்தை முகம்போல் ஆவது கண்டான். இங்கு என்ன நேர்ந்து கொண்டிருக்கிறது?

கண்ணை இசக்கிக் கொண்டான்.

அங்கு அவர்கள் இருவர் தவிர யாருமில்லை.

கண்டதென்ன, கானல்நீரா?

காலடியில் பிரும்மாண்டமான கோலத்தின் மையத்தில் ஒரு மொட்டு, தன் புது மலர்ச்சியில் புன்னகை புரிந்தது

***

வர்கள் தங்கிய வீடு, சன்னதித் தெருவிலேயே. வாசற் குறட்டில் வீட்டுக்காரர் தேங்காய், வெற்றிலை, பழம், பூஜை சாமான்களைக் கடைபோட்டு உட்கார்ந்திருந்தார். அவன் குஞ்சுத் திண்ணையில் சாய்ந்திருந்தான்.

அங்கிருந்து சொர்க்கவாசல் வழி:

திருக்குளம்:

அதைச் சுற்றியோடிய மண்டபம்:

அடுத்து த்வஜஸ்தம்பம்:

நந்திதாண்டி உள்பிரகாரத்தின் வாசலளவுக்கு வாசலை அலங்கரித்த ப்ரபை பூரா மிதக்கும் அகற்சுடர்கள்

அதற்கப்பால் பார்வை எட்டவில்லை. உள்ளூரிலிருந்தும் தங்களைப்போல் வெளியூரிலிருந்தும் வந்து வழிபடுவோரின் பரம்பரை பரம்பரையான முறையிடுகளின் மூட்டத்தில், கர்ப்பக்கிருஹத்தில் காலத்துக்கும் தேங்கிப்போன இருளோடு இருளாய்' இருளுக்குச் சாட்சியாய், கூழையாய், அங்கு ஏதோ குழம்பிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/128&oldid=1288284" இலிருந்து மீள்விக்கப்பட்டது