பக்கம்:அலைகள்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தபஸ் இ 13
 
“நாம் இனி அங்கே போயும் பிரயோசனமில்லை. எல்லாம் எடுத்திருப்பார்கள். ரொம்ப தூரம் பார்--’’


ஆசை எல்லாவற்றிற்கும் எவ்வளவு மகத்தான ஆரம்பமோ, அதே மாதிரி சாவும் அவ்வளவு மகத்தான முடிவு.

என் கண்ணால் காணாத என் மனைவியைப் பற்றி என் கற்பனையில் நான் எழுப்பிக் கொண்டிருந்த உருவம் என் மனத்துள் நீறாவதை நான் உணர்ந்தேன்.

நாளடைவில் நான் வெளியில் நடமாடுகையில் என்னை ஒரு மாதிரியாக எல்லோரும் கவனிப்பதாக எனக்குத் தோன்றிற்று. ஏன் என்று எனக்குப் புரியவில்லை.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் புறைசல்...


அம்மா சொன்னது பொய். என் மனைவி சாகவில்லை.

அவள் சாகவில்லை என்று கேள்விப்பட்டதும், அவள் உருவம் மறுபடியும் ஒன்றுகூடி புது சிருஷ்டிபோல், என் மனதை உதைத்துக்கொண்டு கிளம்புகையில், அந்தப் பரவசத்தில், என் உயிர் தொண்டைவரையில் எழுந்து அமுங்கியது. எனக்கே உள்ளூர அதைப்பற்றி சந்தேகமாயிருந்தது. ஏனெனில் மற்ற ஈமக்கிரியைகள் நடக்கவில்லை, நடத்த வேண்டுமென்று அம்மா சொல்லவுமில்லை, அந்த வீட்டாரும் இங்கு வரவில்லை. நாங்களும் அங்கு போகவில்லை, எல்லாம் கிணற்றில் கல் போட்ட மாதிரியிருந்தது.

என் மனைவி சாகவில்லை, ஆனால்---

அந்த இடத்தில்தான் எல்லோரும் மென்று விழுங்கி விடுகிறார்கள்.

விஷயத்தைக் குறைவாய்ச் சொல்லி உலகம் ஒளிமறைப்புக்கும் பொய்க்குமே இடமாய் இருக்கிறது:

ஒருநாள் மாலை தேவிக்கு அபிஷேகம் செய்வதற்கு, கர்ப்பக்ருஹத்திலிருக்கும் அண்டாவிற்கு ஜலம் கொட்டிக் கொண்டிருந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/15&oldid=1113087" இருந்து மீள்விக்கப்பட்டது