பக்கம்:அலைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36 லா. சா. ராமாமிருதம்


நடுங்கியது. என்ன கனவு.! என்ன வேதனை விஷத்திலே தோய்ந்த அமிழ்தம்போல் இருந்தது என் மன நிலை.

மணி ஆகிவிட்டது.

வீட்டுக்குத் திரும்பினேன்.

மண்ணைத் தின்னும் குழந்தையின் முகத்தழுக்கை என் மனைவி துடைத்துக் கொண்டிருந்தாள்,

என்னைக் கண்டதும் இடுப்பிலிருக்கும் குழந்தையை என் கையில் கொடுத்துவிட்டு, இலை போடப் போனாள். அசதியில் 'ஊம்... ஊம்...'என்று முனகினாள்.

வயிற்றிலிருக்கும் வித்து படுத்தும் வேதனை.

இரண்டு கவளங்களை, வில் உருண்டையாய் விழுங்கினேன்,

"உடம்பு சுகமில்லையா? சாப்பிடவே யில்லையே!”

“ஆமாம்-இன்று என் மடியில் ஒருத்தி செத்தாள்...’ என்று வெடுக்கென்று பதில் சொல்லிவிட்டு, கையையலம்பிக் கொண்டு, மாடி வெளிப்புறத்தில் சாய்வு நாற்காலியில் போய்ச் சாய்ந்தேன்.

தெருவில், டிராம் வண்டிகள் கணகன என்று மணியடித்துக் கொண்டு சக்கரங்கள் தண்டவாளத்தைக் 'கிறீ...ஈ...ச்’ என்று காதைத் துளைக்கத் தேய்த்துக் கொண்டு சென்றன. பஸ்ஸும் மோட்டாரும் ஊதிக்கொண்டு பறந்தன. ஜனப் புழக்கத்தில் தீராத இரைச்சல் கீழே, இடுப்புக் குழந்தையைத் தொட்டிலில் போட்டு என் மனைவி துங்கப் பண்ணிக் கொண்டிருந்தாள். இடையிடையே மூக்கைச் சிந்திப் போட்டாள். என்னதான் சாதுவானாலும், என் மடியில் இன்னொருத்தி செத்தது அவளுக்குப் பொறுக்காது.

“ஆரிரா ரோ... ஆராரோ...!”

ஆம். அவள் யாரோ நான் யாரோ-ஆனால், இவள் மாத்திரம்... இவள் யார்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/38&oldid=1284281" இலிருந்து மீள்விக்கப்பட்டது