பக்கம்:அலைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆஹுதி O 67


நடையின் லகுவும் பிகுவும் விறுவிறுப்பும் உள்ளம் கொள்ளை கொண்டது.

காளையின் கவனம் மாறியது புரியாது காளை நோக்கின் வழி, பசுவும் நோக்கிற்று. அப்போதுதான் அதுவும் அதைக் கண்டது. கண்டதும் கதிகலங்கி மிரண்டது, அதன் அங்கங்களை ஆயிரம் பேய்கள் திடீரெனக் கவ்வின. மலையின் மறு சரிவில் கடக்க முயன்றது. ஆனால் குறுக்கே காளை கல்லாலடித்தாற் போல் நின்றது. பசுவின் கண்ணோரங்களில் சிவப்பு சீறி எழுந்தது. தலைகுனிந்து வாங்கி, பசு தன் முழுகனத்தின் முழு வேகத்துடன் காளையின் வயிற்றில் முட்டிற்று. எதிர்பாராது அப்படி தாக்கியதும், காளைக்குக் கால்கள் சறுகி நிலை பிசகின. சமாளிக்க இட வசதியில்லை. சந்தர்ப்பமுமில்லை. அதற்குள் இன்னொரு முட்டு. கொம்பு தன் சப்பையைக் கிழித்துக் கொண்டு உள்ளிறங்குவதை காளையுணர்ந்தது. உணர்ந்து கொண்டிருக்கையிலேயே அது மலைச் சரிவில் அப்படியே அடியோடு உருண்டது. பசுவின் முழு கனத்தின் உந்தலோடு அது கீழ்நோக்கி விழும் தன் கனத்தின் வேகமும் சேரவே, பற்கள் போல் ஆங்காங்கே நீட்டிக் கொண்டு நிற்கும் கற்கூர்களில் ஒன்று-இரண்டு-மூன்று முறைத்தெறித்து எகிறித் தெறித்து எகிறித் தடாலென மலைச்சரிவிலேயே இருபாறைகளுக்கு நடுவில் விழுந்து ஆப்பு அறைந்தாற் போல் மாட்டிக் கொண்டது.

ஆனால் அதற்கு அப்போது நினைவில்லை.

பசு எங்கோ விழுந்தடித்து ஓடிவிட்டது.

உச்சி வேளைக்குப் பாறைகளில் ஏறிய வெய்யிலின் கொதிப்புத்தான் அதை ஸ்மரணைக்கு மீட்டது. வெப்பம் கண்களைத் துருவிற்று. காளை பிரள முயன்றது. ஆனால் உடல் இம்மிக்கூடக் கிணுங்கவில்லை. இசைகேடாய்ச் சிக்கிக் கொண்டிருந்தது. அந்த முயற்சியில் தொடைத் துவாரத்திலிருந்து இரத்தம் குபுகுபுத்தது. அந்த வலியின் நினைவு திரும்பிய பயங்கரத்தில் காளை வாய்விட்டு அலறிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/69&oldid=1287258" இலிருந்து மீள்விக்கப்பட்டது